விருதுநகர்-திருச்சி ரெயிலை தினசரி இயக்க வேண்டும், பயணிகள் கோரிக்கை


விருதுநகர்-திருச்சி ரெயிலை தினசரி இயக்க வேண்டும், பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Feb 2018 3:30 AM IST (Updated: 25 Feb 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர்-திருச்சி டெமோ ரெயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே துறைக்கு சிவகங்கை மாவட்ட ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை,

விருதுநகரில் இருந்து திருச்சிக்கு சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நகரங்களான மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக டெமோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றி வரும் அலுவலர்கள், வியாபாரிகள், ரெயில் பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மதுரையில் இருந்து காரைக்குடி செல்பவர்கள், ராமேசுவரம் செல்லும் ரெயிலில் ஏறி மானாமதுரை வந்து பின்னர் அங்கிருந்து திருச்சி செல்லும் டெமோ ரெயிலில் செல்கின்றனர். இதேபோல் ராமேசுவரத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகளும் மானாமதுரை வந்து பின்னர் அங்கிருந்து திருச்சி சென்று வருகின்றனர்.

இந்த டெமோ ரெயில் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை மற்றும் மாலை ஆகிய 2 வேளைகளில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் சனிக்கிழமை அன்று காலை விருதுநகரில் இருந்து திருச்சி செல்லும் ரெயில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை தான் திரும்ப வருகிறது.

இதனால் சனிக்கிழமை காலையில் கல்லூரி மற்றும் அரசு வேலைக்கு செல்பவர்கள் மாலையில் ஊருக்கு திரும்பி வர முடியாமல் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே தினந்தோறும் 2 வேளைகளிலும் விருதுநகர்-திருச்சி டெமோ ரெயிலை இயக்க தென்னக ரெயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதவிர தற்போது பஸ் கட்டண உயர்வால் ரெயிலை பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிக கூட்டத்தினால் ரெயிலில் நிற்க கூட முடியாமல் ரெயில் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த டெமொ ரெயிலில் தற்போது உள்ள பெட்டிகள் தவிர கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story