தமிழக முகாம்களில் உள்ள அகதிகளும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கவேண்டும், இலங்கை பெண் விருப்பம்


தமிழக முகாம்களில் உள்ள அகதிகளும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கவேண்டும், இலங்கை பெண் விருப்பம்
x
தினத்தந்தி 25 Feb 2018 4:00 AM IST (Updated: 25 Feb 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முகாம்களில் உள்ள அகதிகளும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை பெண் விருப்பம் தெரிவித்தார்.

ராமேசுவரம்,

கச்சத்தீவில் கடந்த 2 நாளாக நடந்து முடிந்த அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்திய, இலங்கை மக்கள் பங்கேற்றனர்.

இந்த திருவிழாவில் சந்தித்தபோது காதல் மலர்ந்து தொடர்ந்து திருவிழாவிற்கு வரும் இலங்கை தமிழர்களான தில்சான் (வயது 26) கிரேசி(20) ஆகியோர் கூறியதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு முதல் முறையாக அந்தோணியார் ஆலயத் திருவிழா வரும்போது கண்டி பகுதியை சேர்ந்த நானும் தலை மன்னாரில் இருந்து வந்த கிரேசியும் சந்தித்தோம். அப்போது காதல் மலர்ந்து இருவரும் காதலித்து வருகிறோம்.3-வது ஆண்டாக அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு வந்துள்ளோம். இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் கச்சத்தீவு திருவிழாவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கொழும்பில் இருந்து வந்த சிங்களப் பெண் பியோனா (45) கூறியதாவது:-

இந்த ஆண்டு முதல் சிங்களத்திலும் திருப்பலி நடை பெறுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

இலங்கையில் பல பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. 1 கிலோ சீனி-ரூ.115, அரிசி ரூ.110, மண்எண்ணெய் லிட்டர் ரூ.50, பீட்ருட், காரட் 1 கிலோ ரூ.800 என விலை உயர்ந்து விட்டது. அதிபர் தேர்தலில் இலங்கையில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைமன்னாரில் இருந்து வந்த இலங்கை தமிழ்ப் பெண் வில்லியன்ஸ் சாந்தினி கூறியதாவது:-

6-வது ஆண்டாக அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு குடும்பத்தோடு வருகிறேன். கடந்த ஆண்டு திருவிழாவின்போது இந்திய மக்கள் வராமல் இருந்தது மிகுந்த வருத்தமாக இருந்தது. இந்த ஆண்டு திருவிழாவில் இந்திய மக்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. வருகிற ஆண்டுகளில் தமிழக முகாம்களில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழ் மக்களையும் அந்தோணியார் ஆலய திரு விழாவில் பங்கேற்க அனுமதிக்க இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் எங்கள் சொந்தங்களை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story