பா.ஜ.க.வின் தொடர் மிரட்டலில் தான் அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது - தங்கதமிழ்செல்வன் பேட்டி


பா.ஜ.க.வின் தொடர் மிரட்டலில் தான் அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது - தங்கதமிழ்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 25 Feb 2018 4:30 AM IST (Updated: 25 Feb 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜனதாவின் தொடர் மிரட்டலில் தான் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.

ஆண்டிப்பட்டி,

தேனியில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா தேனி அருகே நேரு சிலை பகுதியில் கொண்டாடப்பட்டது. விழாவில் தினகரன் அணியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கி, ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான டாக்டர் கதிர்காமு, நகர செயலாளர் காசிமாயன், ஒன்றிய செயலாளர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற தங்கதமிழ்செல்வன், நிருபர்களிடம் கூறுகையில், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு, தினகரனுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அவர் ‘சிலீப்பர் செல்’ இல்லை. மனம் மாறி, தொகுதி மக்களின் எண்ணம் அறிந்து அவர் எங்கள் பக்கம் வந்துள்ளார். அங்கே (அ.தி.மு.க.) சிலீப்பர் செல்கள் அதிகம் பேர் உள்ளனர். நின்னும் நிறைய பேர் வருவார் கள். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படும். குடும்ப அரசியல் என்று சொல்லும் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்ப உறுப்பினர்களை அடக்கி வைக்க வேண்டும். ஒரே மேடையில் அவருடைய மகன், மருமகன், மச்சினன், தம்பி எல்லோரும் அமர்ந்து இருந்தால், அ.தி.மு.க. தொண்டர்கள் எப்படி ஓ.பன்னீர்செல்வம் பின்னால் செல்வார்கள். அவரை தோற்கடிக்க நாங்கள் வேலை பார்த்தோம் என்று சொல்வது அப்பட்டமான பொய் என்றார்.

இதனை தொடர்ந்து ஆண்டிப்பட்டி நகரில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தங்கதமிழ்செல்வன் கலந்துகொண்டு பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு மாலை அணிவித்தார்.

பின்னர் அவர் அங்கிருந்து கட்சி நிர்வாகிகளுடன் வைகை அணை சாலைப்பிரிவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலை வரை ஊர்வலமாக நடந்து வந்தார். எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தும், அங்கிருந்த ஜெயலலிதா உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

அதன் பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி:- ஜெயலலிதா அறிவித்த பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வந்திருப்பது பற்றி?

பதில்:- பா.ஜ.க. அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஜெயலலிதாவிற்கு நண்பர் என்று கூறிக்கொள்பவர், அவர் மருத்துவமனையில் இருக்கும் போது ஒரு முறை கூட நேரில் வந்து பார்க்கவில்லை. பா.ஜ.க.வின் தொடர் மிரட்டலில் தான் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு உதாரணம், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மோடி கூறியதால் தான் நான் அ.தி.மு.க.வில் இணைந்தேன் என்று கூறியது. அப்படியென்றால் மோடி பேச்சை தான் ஓ.பன்னீர்செல்வம் கேட்கிறார். அதேபோல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மோடி பேச்சை தான் கேட்கிறார். ஜெயலலிதா அறிவித்த ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கு வரும் மோடி, சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் உருவபட திறப்பு விழாவிற்கு வராதது ஏன்? அவர் ஜெயலலிதாவின் நண்பர் தானே? அவர் வந்து ஜெயலலிதா உருவப்படத்தை திறந்தால் எங்களுக்கும் பெருமை தானே? நாங்கள் அதைத்தானே வலியுறுத்தினோம். இந்தியாவில் தலைசிறந்த தலைவர் ஜெயலலிதாவின் உருவ படத்தை ஜனாதிபதியோ, பிரதமரோ நேரில் வந்து திறந்து வைப்பது தானே நியாயம். அதேபோல எங்களுக்கு இன்னொரு தகவலும் கிடைத்துள்ளது. மோடி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு ஆண்டுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த பேச்சுவார்த்தைக்குதான் பிரதமர் தற்போது தமிழகம் வருவதாக தெரிகிறது.

கேள்வி- லோயர் கேம்ப்பில் இருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு தேனி மாவட்ட விவசாயிகளிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?

பதில்:- லோயர் கேம்ப்பில் இருந்து மதுரை நகருக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்க திட்டம் வகுக்கப்பட்ட போதே நான் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த திட்டத்தின்கீழ் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அந்த திட்டத்தை மக்கள் விருப்பப்படி டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிறைவேற்றும் காலம் விரைவில் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூடலூரில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு மாநில இளைஞர் இளம்பெண் பாசறை இணைச்செயலாளரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான அருண்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளில் 5 மற்றும் 6-வது வார்டு பகுதியில் இலவச வேட்டி-சேலைகளையும், 12-வது வார்டு பகுதியில் அன்னதானமும் வழங்கினார். தொடர்ந்து நகரின் அனைத்து, வார்டுகளிலும் டி.டி.வி.தினகரன் அணியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பொன்முருசேகன், பொருளாளர் சின்னுகாளை, துணைச்செயலாளர் லட்சம், பிரதிநிதி சிராஜுதீன் மற்றும் வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சின்னமனூரில் டி.டி.வி. தினகரன் அணியினர் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது. இதற்கு சின்னமனூர் நகர செயலாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் முத்துசாமி ஆகியோர் தலைமை தாங்கி, சின்னமனூர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் டி.டி.வி.தினகரன் அணியினர் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தர்மராஜ் தலைமை தாங்கினார். கண்டமனூர், கடமலைக்குண்டு, வருசநாடு, மூலக்கடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஜெயலலிதா உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைதொடர்ந்து மயிலாடும்பாறை கிராமத்தில் பொங்கல் வைத்து, ஏழை எளிய மக்களுக்கு வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டது.

சிதம்பரம்விலக்கு கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆதரவற்ற முதியோர் விடுதியில் அன்னதானம், வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் பிரிவு ஒன்றிய செயலாளர் சிக்கந்தர், மாவட்ட கழக பொருளாளர் பரமேஸ்வரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வனராஜ், ஒன்றிய துணை செயலாளர் அழகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜேந்திரன், மயிலாடும்பாறை கூட்டுறவு சங்க தலைவர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story