கச்சத்தீவு திருவிழாவில் முதன்முறையாக சிங்கள மொழியிலும் திருப்பலி: இருநாட்டு பக்தர்கள் பங்கேற்பு


கச்சத்தீவு திருவிழாவில் முதன்முறையாக சிங்கள மொழியிலும் திருப்பலி: இருநாட்டு பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 25 Feb 2018 4:30 AM IST (Updated: 25 Feb 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் முதன்முறையாக இந்த ஆண்டு தமிழுடன் சிங்கள மொழியிலும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் இருநாட்டு பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராமேசுவரம்,

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்றுமுன்தினம் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

விழாவில் கலந்து கொள்வதற்காக ராமேசுவரத்தில் இருந்து 62 விசைப்படகுகளில் 1,920 பக்தர்கள் கச்சத்தீவு புறப்பட்டு சென்றனர். இதேபோல இலங்கை கொழும்பு, நீர்க்கொழும்பு, புத்தளம், சிலாவத்துறை, மன்னார், தலைமன்னார், நெடுந்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 7,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர்.

விழாவில் முதல்நாள் சிலுவைப் பாதை திருப்பலி, தேர்பவனி நடைபெற்றன.

இந்திய, இலங்கை பக்தர்கள் தங்களுக்குள் பரஸ்பரமாக உணவு வகைகளை பரிமாறிக்கொண்டனர்.

விழாவில் 2-வது நாளான நேற்று காலை 7 மணி அளவில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. அப்போது இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக தமிழுடன் சிங்கள மொழியிலும் திருப்பலி வழிபாடு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தமிழில் திருப்பலி நிறைவேற்றினார்.

காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமந்த் சுவகே சிங்களத்தில் திருப்பலி நிறைவேற்றினார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த திருப்பலி பூஜைகள் காலை 10 மணிக்கு நிறைவடைந்தன. அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெற்றது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சிங்கள மொழியிலும் திருப்பலி நிறைவேற்றப்பட்டதால் ஏராளமான சிங்கள பக்தர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

விழாவையொட்டி கச்சத்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படை, கடலோர காவல் படைக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட கப்பல் களில் வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காலை 10 மணிக்கு விழா முடிந்ததும் பக்தர்கள் தாங்கள் வந்த படகுகளில் சொந்த நாட்டுக்கு திரும்பினர்.

Next Story