திருப்பூரில், கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலையில் இருந்த நகை- வெள்ளி கிரீடம் கொள்ளை


திருப்பூரில், கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலையில் இருந்த நகை- வெள்ளி கிரீடம் கொள்ளை
x
தினத்தந்தி 25 Feb 2018 4:00 AM IST (Updated: 25 Feb 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலையில் இருந்த நகை மற்றும் வெள்ளி கிரீடத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் உண்டியலில் இருந்த பணத்தையும் மர்ம ஆசாமிகள் அள்ளிச்சென்றனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த ஜி.என்.கார்டன் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு ரவி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் காலை மற்றும் மாலையில் பூஜை நடைபெறுவது வழக்கம்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை என்பதால் மாலையில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பூஜை முடிந்து பக்தர்கள் சென்றதும் பூசாரி ரவி வழக்கம்போல கோவிலின் 2 கதவுகள் மற்றும் சாமி கருவறை, மடப்பள்ளி ஆகியவற்றின் கதவுகளை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்றுகாலை பூஜை செய்வதற்காக ரவிக்கு கோவிலுக்கு சென்றார். அப்போது சாமி கருவறை கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு மற்றும் மடப்பள்ளி அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி ரவி, உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது கருவறையில் சக்திமாரியம்மன் கழுத்தில் அணிந்திருந்த ½ பவுன் தாலி, 300 கிராம் வெள்ளி கிரீடம் மற்றும் மடப்பள்ளி அறையில் இருந்த ½ பவுன் உற்சவ தாலி 2, வெள்ளி குத்துவிளக்கு ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்துள்ள மர்ம ஆசாமிகள் அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை கோவில் வளாகத்தின் வெளியே தூக்கி வீசிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து கோவில் கமிட்டி தலைவர் புவனேந்திரன் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகே கோவில் பூட்டை உடைத்து சாமி நகை மற்றும் உண்டியல் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story