மாவட்டத்தில் 26 இடங்களில் தாய்-சேய் நல மருத்துவ முகாம்


மாவட்டத்தில் 26 இடங்களில் தாய்-சேய் நல மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 25 Feb 2018 3:30 AM IST (Updated: 25 Feb 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கடலூர் மாவட்டத்தில் தாய்-சேய் நல மருத்துவ முகாமை கலெக்டர் தண்டபாணி தொடங்கி வைத்தார்.

கடலூர்முதுநகர்,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 700 சிறப்பு தாய்-சேய் நல மருத்துவ முகாம்கள் நடைபெறும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதில் கடலூர் மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் 26 சிறப்பு தாய்-சேய் நல மருத்துவ முகாம்கள் நேற்று நடைபெற்றது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி கடலூர் முதுநகரில் உள்ள பெருநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் தண்டபாணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-

இன்று மருத்துவ சேவை மக்களின் அன்றாட தேவையாகி விட்டது. பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த முகாமில் பல சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சிறப்பு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

மேலும் கர்ப்பிணிகள் பதிவு செய்தல் மற்றும் பரிசோதனை, இரணஜன்னி தடுப்பூசி போடுதல், சிகிச்சை அளித்தல், மகப்பேறு நிதி உதவிக்கு பெயர் பதிவு செய்தல், ஆய்வக பரிசோதனை, ரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆகியவை வழங்கப்பட உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2018-ம் ஆண்டு ஜனவரி வரை 28 ஆயிரத்து 74 கர்ப்பிணிகள் மகப்பேறு நிதி உதவிக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை ரூ.19 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம் வருகிற 6-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஹபிசா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், கடலூர் நகராட்சி ஆணையாளர் சரவணன், நகர்நல அலுவலர் டாக்டர் எழில்மதனா, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பாஸ்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story