அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்


அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
x
தினத்தந்தி 24 Feb 2018 9:30 PM GMT (Updated: 24 Feb 2018 11:45 PM GMT)

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று அணிவிக்க இருக்கிறார்.

விழுப்புரம்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 23-ந்தேதி(நேற்று முன்தினம்) முதல் 25-ந்தேதி(இன்று) 3 நாட்கள் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

அதாவது, விழுப்புரம் நகராட்சி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, வளவனூர் அரசு மருத்துவமனை, சிறுவந்தாடு ஆரம்பசுகாதார நிலையம், கோலியனூர் ஆரம்ப சுகாதார நிலையம், தோகைப்பாடி ஆரம்ப சுகாதார நிலையம், கண்டமானடி ஆரம்ப சுகாதார நிலையம், அரசமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் மருத்துவமனை ஆகிய 9 அரசு மருத்துவமனைகளில் நேற்று முன்தினம் முதல் இன்றுவரையில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரங்கள் அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடக்கிறது.

இதன் தொடக்க விழா விழுப்புரம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள நகராட்சி மருத்துவமனையில் நடக்கிறது. இதற்கு கோலியனூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் ஜி.ஜி.சுரேஷ்பாபு தலைமை தாங்குகிறார். இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, அங்கு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து விழாவை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஜி.ஜி.சுரேஷ்பாபு, விஜயாசுரேஷ்பாபு ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story