உணவு பொருட்களின் தரம் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிமுகம்


உணவு பொருட்களின் தரம் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிமுகம்
x
தினத்தந்தி 25 Feb 2018 4:15 AM IST (Updated: 25 Feb 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் உணவு பொருட் களின் தரம் குறித்து வாட்ஸ்-அப் எண்ணில் புகார் செய்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:- அரியலூர் மாவட்டத்தில் உணவு வணிகம் செய்யும் தனியார் உணவு வணிகர்கள், அரசு சார்ந்த உணவு வணிக மையங்கள் அனைத்தும் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் மற்றும் பதிவு பெற்றிட வேண்டும். உரிமம் பதிவு பெறாத உணவு வணிக கடைகள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன்படி வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் பிரிவு 31-ன்படி உணவு வணிகர்கள் உரிமம் மற்றும் பதிவு செய்ய வேண்டியது கட்டமாயமாக்க பட்டுள்ளது.

அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெட்டி கடைகள், பீடா ஸ்டால்கள், மளிகை கடைகள், ஏஜென்சிகள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள், குடிநீர் தயாரிப்பு நிலையங்கள், விற்பனை மையங்கள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், தொழில் முறையாக உணவு சமைப்பவர்கள், சமையல் கூடங்கள் அனைத்தும் உரிமம், பதிவு பெற்றிருக்க வேண்டும். விற்று கொள்முதல் ரூ.12 லட்சத்திற்குள்ளாக உள்ளவர்கள் ரூ.100 செலுத்தி பதிவும், அதற்கு மேலாக உள்ளவர்கள் ரூ.2 ஆயிரம் செலுத்தி உரிமம் பெற வேண்டும்.

மேலும் பொதுமக்கள் கவனத்திற்கு, தாங்கள் வாங்கும் உணவு பொருட்களில் உணவு பொருட்கள் தொடர்பான முழு முகவரி மற்றும் உரிமம்-பதிவு எண் இல்லை என்றாலும் கடைகளில் உரிமம், பதிவு எண் இல்லையென்றாலும், உணவு பொருட்களின் தரம் குறைவாகவோ அல்லது ஏதெனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் குறுஞ்செய்தி, வாய்ஸ் மெசேஜ், போன்கால் மூலமாக தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு பதில் அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story