மொபட் மீது டிப்பர் லாரி மோதல்; 1½ வயது மகனுடன் பெண் பலி


மொபட் மீது டிப்பர் லாரி மோதல்; 1½ வயது மகனுடன் பெண் பலி
x
தினத்தந்தி 25 Feb 2018 4:30 AM IST (Updated: 25 Feb 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே மொபட் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 1½ வயது மகனுடன் பெண் பலியானார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு மேலதெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு இரும்பு பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சந்திரா ராஜகுமாரி(வயது 27). இவர்களுடைய மகன் தியாஸ்(1½). நேற்று சந்திரா ராஜகுமாரி, தனது மகனுடன் காசவளநாடு புதூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் புறப்பட்டார். இந்த பஸ் உளூர் பஸ் நிறுத்தத்தில் நின்றவுடன் சந்திரா ராஜகுமாரி தனது மகனுடன் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்.

இவர்களை அழைத்து செல்வதற்காக காசவளநாடு புதூர் வடக்குத்தெருவை சேர்ந்த ரமேஷ் மனைவி லலிதா(29) மொபட்டில் புறப்பட்டு உளூருக்கு வந்தார். அங்கிருந்து 3 பேரும் ஒரே மொபட்டில் புறப்பட்டு காசவளநாடு புதூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மடிகை பெரிய கருப்பண்ணசாமி கோவில் அருகே மொபட் சென்றபோது பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை நோக்கி வந்த டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்திரா ராஜகுமாரி, தியாஸ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். லலிதா படுகாயம் அடைந்தார். இதை பார்த்தவுடன் டிப்பர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.


உடனே அக்கம், பக்கத்தினர் லலிதாவை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்–இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய அடைக்கலம் டேவிட், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் விருதாச்சலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சந்திரா ராஜகுமாரி, தியாஸ் ஆகியோரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவர் விருத்தாசலத்தை சேர்ந்த மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story