ரெயிலில் அடிபட்டு பல்லாவரம் நகராட்சி ஊழியர் பலி


ரெயிலில் அடிபட்டு பல்லாவரம் நகராட்சி ஊழியர் பலி
x
தினத்தந்தி 25 Feb 2018 4:15 AM IST (Updated: 25 Feb 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

குரோம்பேட்டை அருகே பல்லாவரம் நகராட்சி ஊழியர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். குடும்பத்தில் ஒருவருக்கு நகராட்சியில் வேலை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 46). இவர் குரோம்பேட்டையில் உள்ள பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பிரிவில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மதியம் அவர் அலுவலகத்தில் இருந்து மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றார். ஆனால் வீட்டில் சாப்பிடாமல் திரும்பிவந்த அவர், குரோம்பேட்டை-பல்லாவரம் இடையே ஜி.எஸ்.டி. சாலையின் சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்துசெல்ல முயன்றார்.

அப்போது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில் அவர் தலை துண்டாகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரெயில்வே போலீசார் ராஜசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமுத்தாய் வழக்குப்பதிவு செய்து, அவர் எதற்காக மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு தண்டவாளத்தை கடக்க முயன்றார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

ராஜசேகருக்கு அமுதவள்ளி என்ற மனைவியும், பாரதி என்ற மகளும், விவேக் என்ற மகனும் உள்ளனர். மகன், மகள் இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். ராஜசேகரின் வருமானத்தை வைத்துதான் அவர்கள் குடும்பம் நடத்திவந்தனர். ஆனால் அவரது திடீர் மரணத்தால் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் குடும்ப செலவுக்கும், படிப்பு செலவுக்கும் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

பல வருடங்களாக நகராட்சியில் சாதாரண ஊழியராக பணிபுரிந்துவந்த ராஜசேகர், 1½ மாதம் முன்புதான் மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நகராட்சி நிர்வாகம் வேலை வழங்க வேண்டும் என்று நகராட்சி ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story