ஜெயலலிதா பிறந்த நாள் விழா: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்


ஜெயலலிதா பிறந்த நாள் விழா: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 24 Feb 2018 10:39 PM GMT (Updated: 24 Feb 2018 10:39 PM GMT)

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.

புதுச்சேரி,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா புதுவை உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இல்லை என்றாலும் மக்கள் மனதில் அமர்ந்து கொண்டு இருக்கின்றார். மக்களால் நான், மக்களுக்காக நான் என தனது உயிர் மூச்சு உள்ளவரை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர். மாநில கட்சியான அ.தி.மு.க.வை இந்திய அரசியலில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கியவர். தனது ஆட்சி காலத்தில் எண்ணற்ற பல திட்டங்களை இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக கொண்டு வந்தவர். காவிரி பிரச்சினை, முல்லை பெரியார் அணை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு மாநிலம் தழுவிய பிரச்சினைகளில் உறுதியோடு நின்று தமிழக உரிமையை நிலை நாட்டியவர். மக்கள் நலனுக்கு எதிராக இருந்த மத்திய அரசின் நூற்றுக்கணக்கான திட்டங்களை உறுதியோடு எதிர்த்தவர்.

தற்போது ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் வைக்கக்கூடாது என தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. ஊழலில் ஊறித் திளைத்தவர்களுக்கு ஜெயலலிதாவைப்பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் காணாமல் போய்விடுவார்கள். புதுச்சேரியில் தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு கடந்த 2 ஆண்டுகளை முழுமையாக வீணடித்துள்ளது. எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் பலகீனமான முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளார். இலவச அரிசி, முதியோர் உதவித்தொகையும் வழங்கவில்லை. இந்த அரசு தானாக கவிழும் நிலைக்கு வந்துள்ளது. வரும் தேர்தலில் ஜெயலலிதாவின் புனித ஆட்சி புதுச்சேரியில் மலரச் செய்ய வேண்டும் என ஜெயலலிதா பிறந்தநாளில் சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் புருஷோத்தமன், கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், கட்சி நிர்வாகிகள் கணேசன், பன்னீர்செல்வி, நகர செயலாளர்கள் ரவீந்திரன், அன்பானந்தம், பிற அணி செயலாளர்கள் பாப்புசாமி, ஞானவேல், சுப்ரமணி, அந்துவான்சூசை, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஏழை எளிய மக்களுக்கு கிரைண்டர், தையல் எந்திரம், தட்டு வண்டி, ரைஸ் குக்கர், ஹாட்பாக்ஸ், மின்சார அடுப்பு, புடவை, அன்னதான உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Next Story