பூங்காவாக மாறும் வேலூர் கோட்டை மைதானம்


பூங்காவாக மாறும் வேலூர் கோட்டை மைதானம்
x
தினத்தந்தி 26 Feb 2018 3:00 AM IST (Updated: 25 Feb 2018 11:07 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கோட்டை மைதானம் ரூ.1 கோடியில் பூங்காவாக மாற்றப்படுகிறது. அங்கு அரசியல் கட்சி கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்த முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்,

‘வேலூர் கோட்டை’ வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. இங்கு தினமும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்து கோட்டையை பார்த்து செல்கிறார்கள். கோட்டைக்கு வெளியே மைதானம் உள்ளது. அதில் சுற்றுலா வருபவர்கள் மட்டுமின்றி வேலூரைச் சேர்ந்த பொதுமக்களும் மாலை நேரத்தில் அமர்ந்து பொழுதைப் போக்கி வருகிறார்கள்.

இந்தப் பூங்கா தற்போது நடைபாதை வசதியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கோட்டை சுற்றுச்சாலையில் பெரியார் பூங்காவும் உள்ளது. இங்கு வருபவர்களிடம் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களைவிட, காதலர்களின் வருகையே இங்கு அதிகமாக இருக்கிறது.

இதுதவிர வேலூர் கோட்டை மைதானத்தில் இதுவரை பொருட்காட்சி, அரசியல் கட்சி கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. நிகழ்ச்சிகள் நடக்காத நாட்களில் காலை மற்றும் மாலைவேளைகளில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வந்தனர்.

இந்த நிலையில் வேலூர் கோட்டை மைதானம் பூங்காவாக மாற்றப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தொல்லியல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பூமி பூஜையும் நடத்தப்பட்டு கோட்டை மைதானத்தை டிராக்டர் மூலம் சமன்செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

கோட்டை மைதானத்தை ரூ.1 கோடியில் பூங்காவாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இனி இங்கு கட்சி கூட்டங்களோ, பொது நிகழ்ச்சிகளோ நடத்த முடியாது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறந்த பூங்கா உருவாக்கப்படும்.

Next Story