ஜெயலலிதா ஆட்சியை நடத்துவதாக சொல்பவர்கள் அவரது சிலையை கூட ஒழுங்காக வைக்கவில்லை - டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு


ஜெயலலிதா ஆட்சியை நடத்துவதாக சொல்பவர்கள் அவரது சிலையை கூட ஒழுங்காக வைக்கவில்லை - டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 Feb 2018 4:45 AM IST (Updated: 25 Feb 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா ஆட்சியை நடத்துவதாக சொல்பவர்கள் அவரது சிலையை கூட ஒழுங்காக வைக்கவில்லை என்று டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டினார்.

ஆலந்தூர்,

மதுரையில் இருந்து டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகை ஸ்ரீதேவி தமிழகத்தை சேர்ந்தவர். திரையுலகில் புகழ் உச்சத்தில் இருந்தவர். அவருடைய மரணம் அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

உண்மையாக ஜெயலலிதா மீது பற்று உள்ளவர்களாக இருந்திருந்தால், சிலை ஒழுங்காக வந்திருக்கும். சிலையை உள்ளார்த்தமாக வைக்கவில்லை என்று தெரிகிறது. அமைச்சர் ஜெயக்குமார் தேவைப்பட்டால் சிலையில் மாற்றங்களை கொண்டு வருவோம் என கூறியுள்ளார்.

அந்த சிலை ஜெயலலிதா போல் இல்லை. ஜெயலலிதா கம்பீரமாக இருக்கக்கூடியவர். ஜெயலலிதாவின் ஆட்சி நடத்துவதாக சொல்லும் ஆட்சியாளர்கள் அவரது சிலையை கூட ஒழுங்காக வைக்கவில்லை.

கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள சிலையை ஜெயலலிதா ஆத்மா ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையான தொண்டர்களாகிய நாங்கள் கட்சி மற்றும் ஆட்சியை அமைக்கும் போது சின்ன குழந்தை கூட சொல்கிற வகையில் அவரது சிலையை அமைப்போம்.

தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்றால் என்னை சந்திக்கலாம் என கவர்னர் கூறியுள்ளதால், அவர் தமிழகத்தின் சூப்பர் முதல்-அமைச்சராக செயல்படுகிறாரா? தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா, மாநிலத்தில் சுயாட்சி. மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையை அறிவித்தார். அண்ணாவின் வழியில் வந்த தலைவர்கள் அதை தான் பின்பற்றினார்கள்.

அண்ணா பெயரில் கட்சியும், ஜெயலலிதா வழியில் ஆட்சியும் நடத்துவதாக கூறும் இவர்கள் மத்திய அரசுக்கு ஏஜெண்டாக செயல்படுகின்றனர். அமைச்சர் தங்கமணி, பிரதமரை தனியாக சென்று சந்தித்தது ஏன் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story