கர்நாடகா, வடகிழக்கு மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும் - பிரதமர் மோடி பேச்சு


கர்நாடகா, வடகிழக்கு மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும் - பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 26 Feb 2018 5:30 AM IST (Updated: 26 Feb 2018 12:02 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகா, வடகிழக்கு மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும். அதன் பிறகு அக்கட்சி நாடு முழுவதும் காணாமல் போய் விடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

புதுச்சேரி,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் சென்னை வந்தார். அம்மா ஸ்கூட்டர் திட்டம் தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் சென்னையில் தங்கினார். புதுச்சேரி அருகே சர்வதேச நகரான ஆரோவில் உதயமாகி 50 ஆண்டுகள் ஆனதையொட்டி அதன் பொன்விழாவில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு நேற்று காலை 10 மணிக்கு பிரதமர் வந்தார். அங்கு அவரை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கவர்னர் கிரண் பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து குண்டு துளைக்காத காரில் புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு மோடி காலை 10.30 மணிக்கு வந்தார். அரவிந்தர், அன்னை மீராவின் சமாதிகளில் மலர்தூவி அவர் மரியாதை செலுத்தினார். அரவிந்தர் பயன்படுத்திய அறையை பார்வையிட்ட மோடி 20 நிமிடம் தியானத்தில் ஈடுபட்டார். ஆசிரமத்துக்கு சொந்தமான பள்ளிக்கு சென்ற மோடி, மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் முறை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அங்கிருந்து ஆரோவிலுக்கு பிரதமர் மோடி 11.30 மணிக்கு வந்தார். அங்குள்ள அரவிந்தர் சிலைக்கு மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாத்ரி மந்திர் தியான கூடத்துக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அரவிந்தர், அன்னை மற்றும் மாத்ரி மந்திர் படங்கள் அடங்கிய சிறப்பு தபால் தலையை மோடி வெளியிட்டார். ஒருங்கிணைந்த கல்வி புத்தகமும் வெளியிடப்பட்டது. ஆரோவில் இளைஞர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளின் சாவிகளை மோடி வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அரவிந்தர், அன்னை ஆகியோரின் ஆன்மிக கொள்கைகள் சிறந்த மனித நேயத்தை உருவாக்கி வருகிறது. ஆரோவில் சர்வதேச நகரம் 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இங்கு 49 நாடுகளை சேர்ந்த 2,400 பேர் வசித்து வருகிறார்கள். இதன் முக்கிய நோக்கம் மனிதநேய ஒருங்கிணைப்பு என்பதை தாண்டி உலகளாவிய அளவில் இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

ஆரோவில் நிர்வாகம் முடிவில்லா கல்வியை அனைத்து தரப்பினருக்கும் போதித்து வருகிறது. இதை அனைத்து பகுதிக்கும் கொண்டு சென்று சேர்க்கிறது. ஆரோவில்லில் 50 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மண் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. அது ஒரு நேர்மறையான ஆற்றலை தொடர்ந்து கொடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி மதியம் 2.10 மணிக்கு வந்தார். கூட்டத்தில் பிரதமர் மோடி தனது பேச்சை தமிழில் தொடங்கினார். அப்போது அவர், புதுச்சேரி சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். உங்களை பார்க்க புதுச்சேரி வந்ததில் சந்தோஷம். புதுச்சேரி அழகான ஊர் என்று தமிழில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் இந்தியில் பேசினார். அவரது பேச்சை தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

புதுச்சேரி சித்தர்கள் வாழ்ந்த பூமி. இங்கு வாழும் நீங்கள் பாக்கியசாலிகள். இங்கு வந்ததால் நானும் பாக்கியசாலியாக உணர்கிறேன். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பத்திரிகை அச்சடிப்பது, வினியோகிப்பது தடை செய்யப்பட்டு இருந்தபோது புதுச்சேரியில் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு சுதந்திர போராட்ட உணர்வு தூண்டப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தடை போடப்பட்டுள்ளது. பிரதமர் ஜவகர்லால் நேரு 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் மகள் இந்திரா காந்தி 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன்பின் அவரது மகன் ராஜீவ் காந்தி 5 ஆண்டுகள் ஆண்டார். இடையில் அந்த குடும்பத்தின் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி நடந்தது. அவர்கள் 48 ஆண்டுகள் ஆட்சி நடத்தி உள்ளனர்.

வருகிற மே மாதம் வந்தால் மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 48 மாதமாகிறது. கடந்த 48 வருடத்திலும், இந்த 48 மாதத்திலும் நாம் என்ன அடைந்தோம் என்று பார்க்க வேண்டும். உள்கட்டமைப்பு உள்பட அனைத்து துறைகளிலும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு தோல்வியடைந்து உள்ளது.

டெல்லியில் இருந்து கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள். ஏன் அவர்கள் புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை?.

புதுச்சேரி முதல்-அமைச்சரான சீமான் நாராயணசாமிக்கு முன்னதாக வாழ்த்து தெரிவிக்க ஆசை. காரணம் என்ன தெரியுமா? வடகிழக்கு மாநிலங்களில் விரைவில் நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் வீட்டுக்கு சென்றுவிடும். அடுத்ததாக கர்நாடகாவிலும் தோல்வியை தழுவும். அதன் பிறகு நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சி காணாமல் போய்விடும். காங்கிரஸ் முதல்-அமைச்சராக நாராயணசாமி மட்டும்தான் இருப்பார். ஜூன் மாதத்துக்கு பின் இவரை தான் காங்கிரஸ் தலைவர்கள் மாதிரியாக காட்டுவார்கள். (பிரதமர் மோடி தன்னுடைய பேச்சில் பஞ்சாப் காங்கிரஸ் அரசை பற்றி குறிப்பிடவில்லை).

புதுச்சேரியை நவீனமயமாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரூ.1,800 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. பிரெஞ்சு அமைப்பின் உதவியுடன் ரூ.500 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் மேம்பாட்டுக்காக ரூ.450 கோடி திட்டத்துக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சுதேசி தர்ஷன் திட்டத்துக்கு ரூ.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமிக்க கடற்கரையை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் 13 லட்சம் மக்கள் வசிக்கும் புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளில் 3.25 லட்சம் பேருக்கு எந்தவித ஜாமீனும் இன்றி கடன் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பிரதமரின் ஜன்தன் திட்டம் 100 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கான திட்டங்களும் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு 100 சதவீத பணமும் வங்கியில் போடப்படுகிறது. கிராமப்புறத்தை சேர்ந்த 28 ஆயிரம் குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வி அளிக்கப்படுகிறது.

மீனவர்களின் மீன்பிடி கலன்களை நவீனமயமாக்க உள்ளோம். இதற்காக மத்திய அரசின் சார்பில் நீலப்புரட்சி திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். கடற்கரை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சாகர்மாலா திட்டம் உள்ளது. புதிய புதுச்சேரியை உருவாக்க நாம் சபதம் ஏற்போம்.

இவ்வாறு மோடி பேசினார்.

Next Story