மானாமதுரை புதிய பஸ் நிலையத்தில் கால்வாய் கட்டும் பணி தொய்வால் போக்குவரத்து நெரிசல்


மானாமதுரை புதிய பஸ் நிலையத்தில் கால்வாய் கட்டும் பணி தொய்வால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 26 Feb 2018 3:00 AM IST (Updated: 26 Feb 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பஸ் நிலையம் முன்பு நான்கு வழிச்சாலை பணிக்காக கால்வாய் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மானாமதுரை,

மதுரையில் இருந்து திருப்புவனம், மானாமதுரை வழியாக பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மானாமதுரை புறவழிச்சாலையில் புதிய பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. புதிய பஸ் நிலையத்தின் முன்புறம் நான்கு வழிச்சாலை செல்கிறது. பஸ் நிலையத்தை ஒட்டி நான்கு வழிச்சாலை செல்வதால் சாலையின் இருபுறமும் மழைநீர் செல்லும் கால்வாய் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது. இதனால் பஸ் நிலையத்தின் நுழைவுப்பகுதி மூடப்பட்டு, குழிதோண்டும் பணி நடந்து வருகிறது. இதனால் பஸ்கள் அனைத்தும் ஒரே பாதை வழியாக பஸ் நிலையத்தினுள் சென்று வருகின்றன. தினசரி 400-க்கும் மேற்பட்ட பஸ்கள் மானாமதுரை புதிய பஸ் நிலையம் சென்று வருகின்றன. மேலும் மானாமதுரையைச் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் புதிய பஸ் நிலையம் சென்று தான் பரமக்குடி, கமுதி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாகவே நான்கு வழிச்சாலை பணிகளால் மானாமதுரைக்கு பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. தற்போது மழைநீர் செல்லும் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெறுவதால் அனைத்து பஸ்களும் ஒரே பாதையில் சென்று வருகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 2 அல்லது 3 வாரங்களில் பணிகள் முடிந்துவிடும் என்று பார்த்தால் கால்வாய் அமைக்கும் பணிகளில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது தினசரி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து போலீசாரும் பணியில் இல்லாததால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை காரணம் காட்டி சில பஸ்கள் மானாமதுரை புதிய பஸ் நிலையத்தை புறக்கணித்து செல்கின்றன. இதனால் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லமுடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதுடன், அதுவரை பஸ் நிலையத்தில் போதிய போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story