மாவட்ட செய்திகள்

கோவையில் இருந்து பாலக்காடு வழியாக இயக்கி தென்மாவட்ட மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் ரெயில்வே நிர்வாகம் + "||" + Railway management who regularly deceives the people of the South district

கோவையில் இருந்து பாலக்காடு வழியாக இயக்கி தென்மாவட்ட மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் ரெயில்வே நிர்வாகம்

கோவையில் இருந்து பாலக்காடு வழியாக இயக்கி தென்மாவட்ட மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் ரெயில்வே நிர்வாகம்
கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களை கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக இயக்காமல் பாலக்காடு வழியாக இயக்கி தென்மாவட்ட மக்களை தென்னக ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து வஞ்சித்து வருவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
கோவை,

கோவை- போத்தனூர்- பொள்ளாச்சி அகல ரெயில் பாதை 7 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங் களுக்கு பிறகு கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் அதில் ரெயில்களை இயக்காமல் ரெயில்வே நிர்வாகம் காலதாமதம் செய்து வந்தது. இதற்கு கோவை, பொள்ளாச்சியில் உள்ள பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் பகல் நேர ரெயில் இயக்கப்பட்டது.


ஆனால் அந்த ரெயில் தினமும் ரூ.1¼ லட்சம் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அது ரத்து செய்யப்பட்டது. கிணத்துக்கடவு அருகே ரெயில் பாதையில் பாறைகள் உருண்டு விழும் அபாயம் இருப்பதால் ரெயில்களை இயக்குவதில் சிக்கல் உள்ளதாக காரணம் கூறப்பட்டது.

அதன்பின்னர் கோவையில் இருந்து ராமேசுவரத்துக்கு கோவை-கிணத்துக்கடவு-பொள்ளாச்சி வழியாக விடாமல் கோவை-பாலக்காடு-பொள்ளாச்சி வழியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெயில் இயக்கப்பட்டது. ஆனால் அந்த ரெயிலில் போதிய அளவு கூட்டம் இல்லாததால் அந்த ரெயிலும் சில நாட்களில் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறையையொட்டி கோவையில் இருந்து பாலக்காடு வழியாக நெல்லை மற்றும் செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

அவற்றின் விவரம் வருமாறு:-

நெல்லையில் இருந்து மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி வந்து பாலக்காடு வழியாக கோவைக்கு ஏப்ரல் மாதம் 8-ந்தேதி முதல் ஜூலை மாதம் 1-ந் தேதி வரை கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதே போன்று மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நெல்லைக்கு ஏப்ரல் மாதம் 11-ந் தேதி முதல் ஜூலை மாதம் 4-ந்தேதி வரை ரெயில் இயக்கப்படுகிறது.

வண்டி எண் 06013 நெல்லையில் இருந்து தினசரி மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு காலை 5.30 மணிக்கு வந்தடையும். வண்டி எண் 06014 கோவையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு காலை 8.35 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

இந்த ரெயில் பாலக்காடு சந்திப்பு, பாலக்காடு நகரம், புதுநகரம், கொல்லங்கோடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக நெல்லைக்கு செல்லும்.

இதேபோன்று கோவையில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக செங்கோட்டைக்கு கோடை கால சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 9-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து கோவைக்கு ஏப்ரல் மாதம் 4-ந்தேதி முதல் ஜூலை மாதம் 3-ந்தேதி வரை இயக்கப்படுகிறது.

வண்டி எண் 06017 கோவையில் இருந்து தினசரி இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு காலை 10.15 மணிக்கு சென்றடையும். வண்டி எண் 06018 செங்கோட்டையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தடைகிறது.

இந்த ரெயில் பாலக்காடு சந்திப்பு, பாலக்காடு நகரம், புதுநகரம், கொல்லங்கோடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்திப்பு, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயிலில் 3 முன்பதிவுடன் கூடிய குளிர்சாதன பெட்டிகள், 6 முன்பதிவு பெட்டிகள், 6 முன்பதிவு இல்லாத பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜெயராஜ் கூறியதாவது:-

முன்பு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ரெயில்களை கோவை- போத்தனூர்- பொள்ளாச்சி இடையே அமைக்கப்பட்ட அகல ரெயில் பாதையில் இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரெயில்வே நிர்வாகம் அதை ஏற்றுக் கொள்ளாமல் கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களை பிடிவாதமாக பாலக்காடு வழியாக ரெயிலை இயக்கி வருகிறது. இது ஏன்? என்று தெரியவில்லை.

இதனால் பயணிகள் 100 கிலோ மீட்டர் தூரம் அதிகம் சுற்றி செல்வதோடு மட்டுமல்லாமல் 1 மணி 20 நிமிட நேரம் கால விரயம் ஆகிறது. கட்டணம் ரூ.100 அதிகமாக கொடுக்க வேண்டும். ரெயில்களை இயக்காததால் ரூ.350 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள கோவை-பொள்ளாச்சி அகல ரெயில்பாதை வீணடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு ரெயில்வே நிர்வாகம் கூறும் காரணம், கிணத்துக்கடவு அருகே மயிலேரிபாளையத்தில் இரவில் பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழும் அபாயம் உள்ளதால் ரெயில்களை பாலக்காடு வழியாக இயக்குவதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் கோவை-பொள்ளாச்சி இடையே இரவில் இயக்கப்படும் ரெயில் பாதிக்காதா? என்றும் பயணிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

பாறைகள் உருண்டு விழும் அளவிற்கு அமைக்கப்பட்ட ரெயில் பாதைக்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் எப்படி அனுமதி கொடுத்தார்? ரெயில்பாதை அமைக்கும் போதே பாறைகள் உருண்டு விழும் என்று ரெயில்வே நிர்வாகத்துக்கு தெரியாமல் போனது ஏன்? என்று பயணிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆகவே பாறைகள் உருண்டு விழும் என்ற காரணத்தை கூறி கோவை- பொள்ளாச்சி இடையே ரெயில்களை இயக்காமல் ரெயில்வே நிர்வாகம் கோவை மற்றும் தென்மாவட்ட மக்களை வஞ்சித்து வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே கோவையில் அதிகம் வசித்து வரும் தென் மாவட்ட மக்கள் பயன்அடையும் வகையில் பாலக்காடு வழியாக ரெயில்களை இயக்குவதற்கு பதில் கோவை- போத்தனூர்- பொள்ளாச்சி வழியாக ரெயில்களை இயக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.