மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டராக பல்லவி பல்தேவ் பதவி ஏற்பு


மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டராக பல்லவி பல்தேவ் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 26 Feb 2018 3:45 AM IST (Updated: 26 Feb 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டராக ம.பல்லவி பல்தேவ் பதவி ஏற்றுக் கொண்டார். அவர், மாவட்டத்தில் மக்களின் சுகாதாரம், கல்வியை மேம்படுத்த பாடுபடுவேன் என தெரிவித்தார்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய ந.வெங்கடாசலம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில், சென்னை வணிகவரித்துறை (அமலாக்கம்) இணை ஆணையர் ம.பல்லவி பல்தேவ் தேனி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். தேனி மாவட்டத்தின் 15-வது கலெக்டர் இவர் ஆவார். அத்துடன், மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். புதிய கலெக்டராக ம.பல்லவி பல்தேவ் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அலுவலக அறைக்கும் சென்று பார்வையிட்டார்.

பதவி ஏற்றதை தொடர்ந்து கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேனி மாவட்டம் இனிமையாக பழகும் மக்கள் நிறைந்த மாவட்டம் என்று கேள்விபட்டு இருக்கிறேன். இதற்கு முன்பு நான் இங்கு வந்தது கிடையாது. இங்குள்ள மக்களின் பிரச்சினைகள், தேவைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க பாடுபடுவேன். மக்களின் சுகாதாரம், மாணவ, மாணவிகளின் கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை மேம்படுத்த பாடுபடுவேன். உடல் நலம் பாதிக்கப்படும் மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்கவும், நோய்கள் ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தப்படும்.

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த தேவையான திட்டங்களில், செயல்பாடுகளில் கவனம் செலுத்துவேன். கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மாவட்டத்தில் கல்வியை இன்னும் மேம்படுத்தவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் ஆசிரியர்கள் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பசுமை மற்றும் இயற்கை சூழலை மேம்படுத்தவும், சுயஉதவிக்குழுக்கள் மூலம் பெண்களின் நிலையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தின் சுற்றுலா இடங்களை மேம்படுத்தி, சுற்றுலா வளர்ச்சிக்கு தனிக்கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ம.பல்லவி பல்தேவ் மாவட்ட கலெக்டராக முதல் முதலில் தேனி மாவட்டத்தில் தனது பணியை தொடங்கி உள்ளார். இவருக்கு வயது 39. சொந்த மாவட்டம் சென்னை. எம்.காம், எம்.ஏ. (பொது நிர்வாகம்) படித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனார். 2009-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை வேலூரில் பயிற்சி கலெக்டராக பணியாற்றினார். பின்னர் தர்மபுரியில் சப்-கலெக்டராக பணியாற்றினார். 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை கோவை வணிகவரி (அமலாக்கம்) இணை ஆணையராக பணியாற்றினார். 2016-ல் இருந்து சென்னை வணிகவரி (அமலாக்கம்) இணை ஆணையராக பணியாற்றி வந்தார். அங்கிருந்து தேனி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு, பதவியேற்றுள்ளார்.

Next Story