மாவட்ட செய்திகள்

நெல் கொள்முதல் செய்ய வரும் வெளி மாவட்ட வியாபாரிகளை தடுக்கின்றனர், விவசாயிகள் புகார் + "||" + Farmers complain that they are preventing foreign businessmen from procuring paddy

நெல் கொள்முதல் செய்ய வரும் வெளி மாவட்ட வியாபாரிகளை தடுக்கின்றனர், விவசாயிகள் புகார்

நெல் கொள்முதல் செய்ய வரும் வெளி மாவட்ட வியாபாரிகளை தடுக்கின்றனர், விவசாயிகள் புகார்
உத்தமபாளையம் பகுதியில் நெல் கொள்முதல் செய்ய வரும் வெளி மாவட்ட வியாபாரிகளை உள்ளூர் வியாபாரிகள் தடுக்கின்றனர் என்று விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
உத்தமபாளையம்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் தற்போது ஒரு போகம் நெல் மட்டும் சாகுபடி செய்யப்படுகிறது. கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ராயப்பன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் முடிந்து விட்டது. சில இடங்களில் மட்டும் அறுவடை நடைபெற்று வருகிறது.


இந்த பகுதியில் பல ஆண்டு காலமாக 61 கிலோ எடை கொண்ட நெல் மூட்டைக்குதான் விலை நிர்ணயம் செய்வது வழக்கம். இதில் 60 கிலோ நெல், ஒரு கிலோ சாக்கு எடை கழித்து விடுவார்கள். ஒரு மூட்டை நெல் (509 ரகம்) ரூ.950-க்கு கொள்முதல் செய்தனர். தற்போது அறுவடை பணிகள் நிறைவு பெறும் நிலையில் 61 கிலோ எடையை 62 கிலோவாக உயர்த்தி நெல் விலையை மூட்டைக்கு ரூ.50 குறைத்து விட்டனர்.

இதனால் விவசாயிகள் நெல் விற்பனை செய்ய முன்வரவில்லை. இந்த நிலையில் விவசாயிகள் மதுரை, திண்டுக்கல்லில் இருந்து வியாபாரிகளை அழைத்து வந்து நெல் விற்பனை செய்தனர். இதற்கு சில உள்ளூர் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை தடுத்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோகம் நெல் சாகுபடி செய்யப்பட்ட பகுதியில் தற்போது ஒரு போகம் மட்டுமே நடைபெற்று வருகிறது. விதை நெல் மற்றும் உரங்கள் விலை அதிகரித்துவிட்டது. மேலும் கூலி ஆட்கள் தட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் காரணமாக பாதிப்பு அடைந்து வருகிறோம். இந்த நிலையில் விளைந்த நெல்லை விற்பனை செய்வதிலும் கடுமையாக பாதிப்பு அடைந்து வருகிறோம்.

முன்பு நெல் எடை போடும் போது சணல் சாக்குகளை பயன்படுத்துவார்கள். இந்த சாக்கு 900 கிராம் இருக்கும். ஆனால் தற்போது வெள்ள நிற பிளாஸ்டிக் சாக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாக்கின் எடை 100 கிராம் தான் வரும். ஆனால் சாக்கு எடைக்கு ஒரு கிலோதான் குறைத்து வந்தோம். தற்போது இரண்டு கிலோ கழிக்கவேண்டும் என்று வியாபாரிகள் கட்டாய படுத்தி வருகின்றனர்.

வெளி மாவட்ட வியாபாரிகளை அழைத்து நெல் விற்பனை செய்தால் அதனை உள்ளூர் வியாபாரிகள் தடுத்து வருகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2009-ம் ஆண்டு இதே போன்ற நிலை திராட்சை விவசாயிகளுக்கு ஏற்பட்டது. திராட்சை பழத்தை குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் புகார் செய்தனர். அப்போது வியாபாரிகள் மீது அப்போதைய கலெக்டர் முத்துவீரன் கடுமையான நடவடிக்கை எடுத்தார். அதேபோன்று மாவட்ட நிர்வாகம் நெல் விவசாயிகளின் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.