மாவட்ட செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் பா.ஜ.க.வை ஒதுக்கி விட்டு யாரும் ஆட்சிக்கு வரமுடியாது: பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு + "||" + In Tamilnadu, Puducherry can not come to power aside from the BJP

தமிழகம், புதுச்சேரியில் பா.ஜ.க.வை ஒதுக்கி விட்டு யாரும் ஆட்சிக்கு வரமுடியாது: பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

தமிழகம், புதுச்சேரியில் பா.ஜ.க.வை ஒதுக்கி விட்டு யாரும் ஆட்சிக்கு வரமுடியாது: பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
தமிழகம், புதுச்சேரியில் பா.ஜ.க.வை ஒதுக்கிவிட்டு யாரும் ஆட்சிக்கு வரமுடியாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கூறினர்.
புதுச்சேரி,

லாஸ்பேட்டை மைதானத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.

முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

இந்தியாவை தலைசிறந்த நாடாக்க பிரதமர் மோடி உறுதி எடுத்து உள்ளார். அதன்படி கடந்த 3½ ஆண்டுகளாக நாடு உயர்ந்து வருகிறது. அடித்தட்டு மக்களாக விபத்து காப்பீடு திட்டம், அடல் பென்ஷன் திட்டம் என பல்வேறு திட்டங்களை தந்தார். 2022-க்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தையும் தந்துள்ளார்.


தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 6 கோடி கழிவறை தந்தார். தற்போது மத்திய பட்ஜெட்டில் மேலும் 2 கோடி கழிவறை கட்ட ஏற்பாடு செய்துள்ளார். ஏழை மக்கள் 5 கோடி பேருக்கு சமையல் கியாஸ் இணைப்பு தந்தார். பட்ஜெட்டில் மேலும் 3 கோடி பேருக்கு கியாஸ் இணைப்பு தர உள்ளார். 4 கோடி பேருக்கு மின்சார இணைப்பு தரும் திட்டமும் உள்ளது.

கப்பல் போக்குவரத்துத் துறையில் சென்னை, புதுச்சேரி துறைமுகங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் மூலம் திருச்சி, கடலூர் போன்ற ஊர்களுக்கு வரும் சரக்குகளை புதுச்சேரி வழியாக கொண்டு வந்து செல்லலாம். புதுவையில் இருந்து நாகப்பட்டினம் வரை ரூ.600 கோடி செலவில் சாலை வர உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. புதுவையில் அரசியல் மாற்றம் கொண்டுவந்து காட்டுவோம்.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பேசியதாவது:-

காவிப்புரட்சியை கொண்டுவரும் நோக்கத்தோடு மக்கள் இங்கு கூடி உள்ளார்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரதமர் புதுவை வந்தார். அப்போது அவர்களது கட்சி இங்கு ஆட்சியில் இருந்தது. இப்போது நமது பிரதமர் இங்கு உரையாற்றுகிறார். எனவே அடுத்து வருவது பாரதீய ஜனதாவின் ஆட்சியாகத்தான் இருக்கும்.

புதுவையில் ஊழலில் திளைத்த காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டார்கள். புதுவை உருப்பட பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரவேண்டும்.

சமீபத்தில் மரியாதை குறைவாக இந்த மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி பக்கோடா போட்டு விற்கும் போராட்டம் நடத்தினார். அவர் பக்கோடா போடுகிறார் என்று பார்த்தால் பஜ்ஜி சுடுகிறார். பக்கோடாவிற்கும், பஜ்ஜிக்கும் வித்தியாசம் தெரியாமல் முதல்-அமைச்சர் உள்ளார்.

புதுவைக்கு தற்போது பிரதமர் மோடி வந்திருப்பதால் காங்கிரசார் ராகுல்காந்தியை வரவழைப்பார்கள். எந்த மாநிலத்துக்கு பிரதமர் மோடி, அமித்ஷா வந்தால் பாரதீய ஜனதா வெற்றிபெறும். ஆனால் ராகுல்காந்தி வந்தால் காங்கிரஸ் தோற்றுவிடும். தமிழகம் -புதுவையில் நம்மை ஒதுக்கிவிட்டு யாரும் ஆட்சிக்கு வர முடியாது. 19 மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சிகள் மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

புதுவை பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

நாட்டில் உள்ள 80 சதவீத மக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கிறார்கள். மோடி பிரதமரான போது 4 மாநிலங்களில்தான் பாரதீய ஜனதா ஆட்சி இருந்தது. இப்போது 19 மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி நடக்கிறது.

புதுவையில் பாரதீய ஜனதா ஆட்சி அமைய இந்த பொதுக்கூட்டம் அடித்தளம். காங்கிரஸ் அரசு தொழிற் சாலைகள், பஞ்சாலைகளை மூடிவிட்டது. குப்பைக்கு கூட வரி வசூலிக்கிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஊழலால் மாநில மக்கள் துன்பப்படும் நிலை உள்ளது. கூட்டுறவு ஊழியர்களுக்கு 15 மாதமாக சம்பளம் இல்லை.

கடந்த காலங்களில் இந்திய பிரதமர்கள் வெளிநாட்டிற்கு கடன் வாங்க சென்றார்கள். ஆனால் நமது பிரதமர் கடன் வாங்கவில்லை. உலக தலைவர்கள் பிரதமர் மோடியின் ஆலோசனையை கேட்கிறார்கள்.

புதுவை மக்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக போராடவேண்டும். முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் பாரதீய ஜனதாவினால் புதுவையில் காலூன்ற முடியாது என்கிறார்கள். ஆனால் 2021-ல் புதுவையில் பா.ஜ.க. ஆட்சி அமையும்.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசினார்.