கொடைக்கானல் அருகே சாலையில் மதுபாட்டில்களை உடைத்து பொதுமக்கள் போராட்டம்


கொடைக்கானல் அருகே சாலையில் மதுபாட்டில்களை உடைத்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2018 9:45 PM GMT (Updated: 25 Feb 2018 8:22 PM GMT)

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக அனுமதியின்றி மது விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கொடைக்கானல்,

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக அனுமதியின்றி மது விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசில் பல முறை புகார் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலையிலேயே அந்த பகுதியில் அனுமதியின்றி மதுபான விற்பனை நடந்தது. இதையறிந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். பின்னர் அனுமதியின்றி மதுபானம் விற்று கொண்டிருந்தவரிடம் இருந்த மதுபான பாட்டில்களை எடுத்து சாலையில் போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே அங்கு அனுமதியின்றி மதுபானம் விற்றதாக பள்ளங்கி காமராஜபுரத்தை சேர்ந்த இளங்கோவன் (வயது 48) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 23 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

Next Story