சேலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்


சேலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 25 Feb 2018 11:00 PM GMT (Updated: 25 Feb 2018 9:05 PM GMT)

சேலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மார்ச் மாதம் 6–ந் தேதி வரை நடைபெறுகிறது என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட குமாரசாமிப்பட்டி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் ரோகிணி முகாமை தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் ஆர்.சதீஷ், பன்னீர்செல்வம் எம்.பி, ஏ.பி. சக்திவேல் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் கூறுவதை கலெக்டர் ரோகிணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் ரோகிணி கூறியதாவது:–


சேலம் மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை(செவ்வாய்க்கிழமை)) மற்றும் மார்ச் மாதம் 2–ந் தேதி முதல் 6–ந் தேதி வரை(4–ந் தேதி தவிர) நடைபெற உள்ளது. இம்முகாமில் கருவுற்ற பெண்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, குழந்தைகளின் வளர்ச்சி தொடர்பான ஸ்கேன் எடுக்கப்படும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் மற்றும் சர்க்கரை அளவுகள் சரிபார்க்கப்படும். எடை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான தடுப்பூசிகள் போடப்படும்.

மேலும் கருவுற்ற பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும். ஆர்.சி.எச். எண் (பேறு சார் எண்) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ், உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்குவது, வங்கி கணக்குகள் தொடங்குவதற்கான உதவிகள் மற்றும் பான்கார்டு பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த விவரங்கள் தெரிவிப்பது போன்ற பணிகள் முகாமில் நடைபெறும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைகள் வழங்குவதோடு, குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்துகள் உரிய இடைவெளியில் போட வேண்டிய தடுப்பூசிகள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் கே.பி.கோவிந்தன், மாநகர் நல அலுவலர் டாக்டர் பிரபாகரன், மருத்துவ அலுவலர்கள் இளமதி, டாக்டர்கள் வருண் சுந்தரராஜன், ரேவதி, மானசா, பானுமதி, தாய்சேய் நல அலுவலர் சுமதி, சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story