கர்நாடகாவில் விரைவில் தேர்தல் வருவதால் காவிரி மேலாண்மை வாரியம் பற்றி பேச பிரதமர் மறுப்பு


கர்நாடகாவில் விரைவில் தேர்தல் வருவதால் காவிரி மேலாண்மை வாரியம் பற்றி பேச பிரதமர் மறுப்பு
x
தினத்தந்தி 26 Feb 2018 4:15 AM IST (Updated: 26 Feb 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ளதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமர் பேச மறுத்து வருவதாக நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

நாமக்கல்,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நேற்று நாமக்கல் திருவள்ளுவர் நகரில் கொடியேற்று விழா நடந்தது. விழாவுக்கு கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடிஏற்றி வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் சென்னையில் நடைபெற்ற அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தும், கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் தான் பிரதமர், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பேச மறுத்து விட்டார் என சந்தேகம் எழுந்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா அரசியலில் பின்னடைவு ஏற்படும் என பிரதமர் யோசிக்கிறாரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது. அனைத்து கட்சியும் ஒரே மாதிரி குரல் எழுப்பி உள்ளதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இனியும் தமிழகத்தை ஏமாற்றிவிட முடியாது.

நீலகிரி மலையில் உற்பத்தியாகும் தண்ணீர், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு செல்கிறது. அந்த தண்ணீர் தான் காவிரியில் வெள்ளமென புரண்டு வருகிறது. எனவே கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு செல்லும் தண்ணீரை தடுக்கும் வகையில், நீலகிரி மலையில் தமிழக அரசு உடனடியாக புதிய அணை கட்ட வேண்டும். இதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆராய வல்லுனர் குழு அமைக்க வேண்டும்.

ரஜினி, கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருகின்றனர். ஆனால் தமிழகத்தின் நகர்புறம் மற்றும் கிராமபுற மக்களிடம் அவர்களுக்கு ஆதரவு இருப்பதை காண முடியவில்லை. ஊடகத்தின் வாயிலாக அவர்கள் பிரசார படுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால் மக்களிடம் எவ்வித தாக்கமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் துரை, மாவட்ட பொருளாளர் செல்வராஜ், நகர செயலாளர் சுரேஷ், தலைவர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story