மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் அருகே விபத்தில் பலியான வாலிபர், சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் + "||" + A youth who was killed in the accident near Nagercoil

நாகர்கோவில் அருகே விபத்தில் பலியான வாலிபர், சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர்

நாகர்கோவில் அருகே விபத்தில் பலியான வாலிபர், சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர்
நாகர்கோவில் அருகே விபத்தில் பலியான வாலிபர் யார்? என்று 23 நாட்களுக்கு பிறகு அடையாளம் தெரிந்தது. அவர் கற்பழிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்ற தகவலும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் நித்திரவிளை அஞ்சாலிவிளையை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 3-ந் தேதி இரவு விக்னேஷ், தன்னுடன் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார்.


ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகர் பகுதியில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஹரிஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த ஹரிஷ் வேலை பார்த்த நிறுவனத்தின் அடையாள அட்டையை வைத்து போலீசார் கோவையில் விசாரணை நடத்தினர். ஆனால் அடையாள அட்டை மூலம் எந்தவித துப்பும் கிடைக்காததால் அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே ஆரல்வாய்மொழி போலீஸ்காரர் ஒருவர் கோவைக்கு சென்றார். பின்னர், அங்குள்ள போலீஸ்காரர்களின் வாட்ஸ் அப் குரூப்பில் இறந்த ஹரிஷின் புகைப்படைத்தை அனுப்பினார். அந்த படம் கோவை முழுவதும் செல்போன்களில் பரவியது.

ஒவ்வொருவர் செல்போன் மூலமாக பரவிய படம், அவரது சகோதரி இந்துமதிக்கும் சென்றது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது தாயாருக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் அவர்கள், கோவை போலீசாரின் உதவியுடன் ஆரல்வாய்மொழிக்கு நேற்று காலை வந்தனர். ஆரல்வாய்மொழி போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. இறந்தவரின் உண்மையான பெயர் பிரபு (வயது 30) என்பது தெரியவந்தது. கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரை சேர்ந்த பிரபுக்கு திருமணம் முடித்து மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது.

பீளமேடு பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுமியை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இதன் காரணமாக பிரபுவை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

ஜாமீனில் வெளியே வந்த பிரபு அதன்பிறகு தாயார், சகோதரி மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்ளாமல், வீட்டிற்கும் செல்லாமல் இருந்து வந்தார். மேலும், குடும்பத்தினருக்கு தெரியாமல் தனது பெயரையும் ஹரிஷ் என்று மாற்றி வைத்துக்கொண்டு ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்ததும் தெரியவந்தது. பெயர் மாற்றத்தால் அடையாளம் காண்பதில் சிக்கல் நீங்கி 23 நாட்களுக்கு பின் நேற்று பிரபுவின் உடலை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.