விஜயாப்புரா அருகே அரசு பஸ்-லாரி மோதல்


விஜயாப்புரா அருகே அரசு பஸ்-லாரி மோதல்
x
தினத்தந்தி 25 Feb 2018 10:50 PM GMT (Updated: 25 Feb 2018 10:50 PM GMT)

ராகுல்காந்தியின் பாதுகாப்புக்கு சென்ற 25 போலீஸ்காரர்கள் படுகாயம்.

பெங்களூரு,

விஜயாப்புரா அருகே அரசு பஸ்சும், லாரியும் மோதிக்கொண்டதில் ராகுல்காந்தியின் பாதுகாப்புக்கு சென்ற 25 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் நேற்று பாகல்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக பொதுக்கூட்டம் மற்றும் ராகுல்காந்திக்கு பாதுகாப்பு அளிக்க நேற்று அதிகாலையில் விஜயாப்புராவில் இருந்து பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டிக்கு அரசு பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் புறப்பட்டு சென்றார்கள். விஜயாப்புரா புறநகர் பபலேஷ்வரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அரசு பஸ்சும் ஒரு லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

லாரி மோதிய வேகத்தில் அரசு பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதில், 5 பெண் போலீசார் உள்பட 25 போலீஸ்காரர்கள் பலத்தகாயம் அடைந்தார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் விஜயாப்புரா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். அதன்பிறகு, நேற்று மதியம் ஆஸ்பத்திரியில் இருந்து மற்றொரு பஸ்சில் பாகல்கோட்டைக்கு போலீஸ்காரர்கள் புறப்பட்டு சென்றனர். இது குறித்து விஜயாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story