சாலை விரிவாக்கப்பணிக்கு அகற்றிய இந்திராகாந்தி சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் கலெக்டரிடம் மனு


சாலை விரிவாக்கப்பணிக்கு அகற்றிய இந்திராகாந்தி சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 27 Feb 2018 4:30 AM IST (Updated: 26 Feb 2018 10:55 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் சாலை விரிவாக்கப்பணிக்கு அகற்றிய இந்திராகாந்தி சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று கலெக்டரிடம் காங்கிரசார் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெறுவது வழக்கம். அதேபோல் திங்கட்கிழமையான நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அவற்றை கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டார். பின்னர் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டமும் நடந்தது.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் பிரின்ஸ் எம்.எல்.ஏ.. நிர்வாகிகள் சிவகுமார், அந்தோணிமுத்து, என்ஜினீயர் அலெக்ஸ், மகேஷ்லாசர், அசோக்ராஜ் உள்பட ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உருவச்சிலை நாகர்கோவில் மத்தியாஸ் வார்டு சந்திப்பு பகுதியில் நிறுவப்பட்டிருந்தது. சாலை விரிவாக்கத்துக்காக இந்த சிலையை அகற்றுகிறோம் என்றும், இருந்த இடத்திலேயே மீண்டும் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி தந்து அந்த சிலையை அகற்றினர். ஆனால் அந்த சிலையை திரும்ப நிறுவுவதற்கான எந்த நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. எனவே இந்திரா காந்தி சிலையை மீண்டும் நிறுவ கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் குமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராமனாதிச்சன்புதூர் பொதுமக்கள் அங்குள்ள கிறிஸ்தவ ஆலய பங்குத்தந்தையுடன் கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

எங்கள் ஊரில் தனியார் நிறுவனத்தின் செல்போன் கோபுரத்தை ஒருவருக்கு சொந்தமான இடத்தில் அமைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. முறையான அங்கீகாரம் மற்றும் சான்றுகள் பெறாமல் இந்த செல்போன் கோபுரம் நிறுவ முயற்சிகள் நடக்கிறது. எனவே இதை பொதுமக்கள் தடுத்ததால் சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நாங்களும் துணை சூப்பிரண்டு முன்னிலையில் ஆஜராகி சட்டத்துக்கு புறம்பாக செல்போன் கோபுரம் அமைக்கப்படுவது குறித்து புகார் தெரிவித்தோம்.

எனவே ஊரின் மையப்பகுதியில் அமைய இருக்கும் செல்போன் கோபுரத்தால் எங்கள் ஊர் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் பேராபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால், அந்த செல்போன் கோபுரத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story