அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்


அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 Feb 2018 3:15 AM IST (Updated: 26 Feb 2018 11:56 PM IST)
t-max-icont-min-icon

தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

தண்டராம்பட்டு,

செங்கம் சட்டமன்ற தொகுதியில் தண்டராம்பட்டு ஒன்றியம் அமைந்துள்ளது. தண்டராம்பட்டை தலைமையிடமாக கொண்டு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தனி தாலுகா உருவானது. தண்டராம்பட்டு, வாணாபுரம், தானிப்பாடி ஆகிய 3 வருவாய் உட்கோட்டங்களை உள்ளடக்கிய இந்த தண்டராம்பட்டு தாலுகாவில் திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட சில கிராமங்களையும் சேர்த்து 47 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனி தாலுகா உருவாக்கப்பட்டு, ஓராண்டு காலத்திலேயே தாலுகா அலுவலக கட்டிடம் அனைத்து வசதிகளுடன் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

பொதுமக்களின் நலன் கருதி, அந்த தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு அறை சுகாதார வசதியுடன் கட்டப்பட்டு, அங்கு கழிவறை வசதியும் இணைக்கப்பட்டது. இவை தவிர குடிநீர் வசதி, வணிக கட்டிடம் போன்றவையும் கட்டி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்களும், காத்திருப்பு அறையை பயன்படுத்தி வந்தனர். அதிகாரிகளை சந்தித்து சான்றுகளை பெற காலதாமதம் ஏற்பட்டாலும் காத்திருப்பு அறை பயன்உள்ளதாக இருந்தது.

நாள்தோறும் தாலுகா அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் காத்திருப்பு அறையை பயன்படுத்தி வந்த நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால், அவை பயன்பாட்டிற்கு தொடர்ந்து நீடிக்காமல் பழுதடைய ஆரம்பித்தது.

அதை சரி செய்யாமல், பொதுமக்களை அங்கிருந்து விரட்டும் விதமாக, காத்திருப்பு அறைக்கு அதிகாரிகள் பூட்டு போட்டு, ஆண்டுக்கணக்கில் அதனை மூடியே வைத்து உள்ளனர். இதனால் அடிப்படை வசதியான கழிவறை வசதி இல்லாததால் தாலுகா அலுவலகத்தில் காலி இடத்திலும், சந்துகளிலும் சிறுநீர் கழித்து விட்டு செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

இவை மட்டுமின்றி, அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த குடிநீர் தொட்டியும், பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் போனதால், உயிர் போகும் நிலை ஏற்பட்டாலும் ஒரு டம்ளர் தண்ணீர் கூட பொதுமக்களுக்கு கிடைக்காத வகையில், தண்ணீர் வசதியே இல்லாத தாலுகா அலுவலகமாக தண்டராம்பட்டு தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. பணியாற்றும் அலுவலர்களுக்கு மட்டுமே இங்கு அடிப்படை வசதிகள் அமைந்து உள்ளது.

வருகிற நாட்கள், கோடைகாலமாக இருப்பதால், தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அடிப்படை வசதி இல்லாத காரணத்தால் இன்னும் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே, அடிப்படை வசதிகளை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story