திருப்பூரில் வாலிபர் மர்ம சாவு


திருப்பூரில் வாலிபர் மர்ம சாவு
x
தினத்தந்தி 27 Feb 2018 3:30 AM IST (Updated: 27 Feb 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வாலிபர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் தில்லைநகர் பகுதியை சேர்ந்த முத்துசாமியின் மகன் ரவி (வயது 34). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் அந்த பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக ரவி, மனநலம் பாதிக்கப்பட்டு திருப்பூர் பகுதியில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பூர்- தாராபுரம் ரோட்டில் உள்ள கரட்டாங்காடு 6-வது வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் அருகில் நேற்று காலை ரவி தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் போலீஸ் துணை கமிஷனர் கயல்விழி, உதவி கமிஷனர் தங்கவேல் ஆகியோர் விசாரணைசெய்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். போலீசாரின் மோப்ப நாய் வெற்றி, அந்த இடத்தை மோப்பம் செய்து, சிறிது தூரம் ஓடி சென்று பின் நின்றது.

நேற்று முன்தினம் இரவு ரவி, கரட்டாங்காடு பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 2-வது மாடிக்கு அவர் ஏறி சென்றதாக கூறப்படுகிறது. அந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் அவர் இறந்தாரா? இல்லை வேறு யாராவது கல்லால் அடித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். திருப்பூர் தெற்கு போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story