ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 79 ஜோடிகளுக்கு திருமணம் அமைச்சர் நடத்தி வைத்தார்


ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 79 ஜோடிகளுக்கு திருமணம் அமைச்சர் நடத்தி வைத்தார்
x
தினத்தந்தி 27 Feb 2018 4:30 AM IST (Updated: 27 Feb 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூரில், 79 ஜோடிகளுக்கு திருமணத்தை அமைச்சர் ஆர்.காமராஜ் நடத்தி வைத்தார். அப்போது 70 வகையான சீர் வரிசைப் பொருட்களும் மணமக்களுக்கு வழங்கப்பட்டது.

திருவாரூர்,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அனைத்து மத ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் அ.தி.மு.க கொடி யேற்றப்பட்டு, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டுகள், எழுது பொருட்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் வன்மீகபுரம் அம்மா அரங்கில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 79 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவுக்கு மாவட்ட செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அத்துடன் குத்துவிளக்கு, கட்டில், மெத்தை, பீரோ, மின்விசிறி, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட 70 வகையான சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது.

திருமணத்தை நடத்தி வைத்து அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் பிறந்த நாளில், அவர் உயிரோடு இருந்திருந்தால் எந்த அளவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி இருப்பாரோ, அந்த அளவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்திற்கு அடையாளம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. எங்களுக்கு அடையாளம் இந்த இயக்கம் தான்.

இந்த விழாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து மடல் அனுப்பி உள்ளார். அதே போல துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று மணவிழா கண்டுள்ள மணமக்கள் தங்களது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து காட்ட வேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எம்.பி.க்கள் டாக்டர் கோபால், பரசுராமன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, முன்னாள் எம்.எல்.ஏ அசோகன், பாப்பா சுப்ரமணியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்வாசுகிராமன், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், அன்பு, ராமகுணசேகரன், நகர பேரவை செயலாளர் கலியபெருமாள், தகவல் தொழில்நூட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார். 

Next Story