உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு சட்டசபைக்கு 6 மாதத்தில் தேர்தல் திவாகரன் பேட்டி


உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு சட்டசபைக்கு 6 மாதத்தில் தேர்தல் திவாகரன் பேட்டி
x
தினத்தந்தி 27 Feb 2018 4:30 AM IST (Updated: 27 Feb 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வராது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு சட்டசபைக்கு 6 மாதத்தில் தேர்தல் வரும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறினார்.

வேதாரண்யம்,

சசிகலாவின் சகோதரர் திவாகரன், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டிணம் அருகே உள்ள செண்பகராயநல்லூரில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வராது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு 6 மாத காலத்தில் சட்டசபை தேர்தல் வந்து விடும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபுவை தொடர்ந்து மேலும் எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணிக்கு வரலாம். எல்லோரும் நம்ம எம்.எல்.ஏ.க்கள் தான். இங்கேயும் இருப்பார்கள், அங்கேயும் இருப்பார்கள்.

குழப்பத்தின் உச்சக்கட்டத்தில் இருப்பதால் அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்கள். தலைமை கழக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை வைத்தது காமெடியாக போய் விட்டது. இந்த சிலையின் முகத்தை மட்டும் மாற்றப்படும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியையும், கட்சியையும் யார் பொறுப்பாக கவனிக்கிறார்கள் என தெரியவில்லை. சிறுபிள்ளை விட்ட வெள்ளாமையாக போய்விட்டது. இலவச திட்டங்களை எதிர்க்கும் பிரதமர் மோடியைக்கொண்டு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளனர். ஜெயலலிதாவின் சிலையை சட்டமன்றத்தில் வைப்பதில் சட்ட சிக்கல் வரலாம். ஆனால் தலைமைக்கழகத்தில் வைப்பதில் பிரச்சினை இல்லையென்பதால் சிலை திறக்க பிரதமர் மோடியை அழைத்து இருக்கலாம்.

அ.தி.மு.க.வை இயக்குவது பா.ஜ.க.தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். கடந்த ஒரு வருடமாக இந்த கேள்வி போய்க்கொண்டு இருக்கிறது. பதிலை தெரிந்துகொண்டுதான் கேள்வி கேட்கின்றனர். அடிபணிந்து வேலை செய்து கொண்டு இருக்கும் வரை இந்த கேள்வி முடிவுக்கு வராது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story