மன அழுத்தம் தவிர்ப்போம்! தேர்வில் ஜெயிப்போம்!!


மன அழுத்தம் தவிர்ப்போம்! தேர்வில் ஜெயிப்போம்!!
x
தினத்தந்தி 27 Feb 2018 12:29 PM IST (Updated: 27 Feb 2018 12:29 PM IST)
t-max-icont-min-icon

தேர்வுகள் நம்மை தேர்ச்சி அடைய வைப்பதாக இருக்க வேண்டும். வாழ்வில் உயர்ச்சியைத் தரும் படிக்கல்லாக அமைய வேண்டும்.

தேர்வுகள் நம்மை தேர்ச்சி அடைய வைப்பதாக இருக்க வேண்டும். வாழ்வில் உயர்ச்சியைத் தரும் படிக்கல்லாக அமைய வேண்டும். மாறாக, தேம்பி நிற்கச் செய்யும், கவலையில் தோய்க்கும் ஒரு விரோதியாக தேர்வுகள் இருந்துவிடக்கூடாது. தேர்வுகள் நம்மை ஆட்டி வைக்காமல் இருக்க நாம் அதைக் கண்டு பயப்படாமல் இருப்பதே முதல் வழி. தேர்வை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பயமே, மன அழுத்தமாக மாறி, பதற்றத்தைத் தந்து தோல்விக்கு வைத்துவிடுகிறது. தற்கொலைக்குள் தள்ளும் தைரியமற்ற தன்மையையும் வளர்த்துவிடு கிறது. தேர்வு தரும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு தேர்வில் ஜெயிக்க வைக்கும் மந்திரமொழிகள் சில...

* தேர்வு என்பது உங்கள் கற்றல் திறனை சோதிக்கும் ஒரு பரீட்சை அவ்வளவுதான். தேர்வுடன் வாழ்வில் எதுவும் முடிந்துவிடுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எளிதில் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் எவ்வளவோ எளிய முறைகளை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எளிமையான வினாக்கள், முக்கிய வினாக்கள், மனப்பாடப் பகுதிகள், அழகுபடுத்தும் உபாயம், படம் வரைதல் என பல்வேறு யுத்திகள் மூலம் எளிதில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையை மனதில் விதையுங்கள்.

* தேர்வையும், எதிர்காலத்தையும் ஒப்பிட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். எதிர்காலம் எந்த வினாடியும் உங்கள் கைகளில்தான் இருக்கும். அதை எப்போது நினைத்தாலும் உங்கள் விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும், நீங்கள் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதிருந்தால் போதும். எனவே தேர்வு பயத்தை துரத்திவிட்டு நம்பிக்கையுடன் தேர்வை எழுதுங்கள். முந்தைய காலம்போல இல்லாமல், இப்போதெல்லாம் மறு தேர்வுகள் உடனே நடத்தப்படுகின்றன. அப்படியிருக்கும் போது எதற்கு அச்சப்பட வேண்டும்? ஏன் தவறான முடிவை எடுக்க வேண்டும். துணிவுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள், வெற்றி உங்களுக்கே.

* விளையாட்டும், இசையும் மன அழுத்தத்தை மாயமாக்கும் மந்திர வழிகள். உங்களுக்குப் பிடித்த இசையைக் கேளுங்கள். நண்பர்களுடன் சிறிது நேரம் விளையாடி வாருங்கள். குடும்பத்தினருடன் கூடி இருந்து அரட்டையடியுங்கள். ஒரே அறையில் புத்தகங்களுடன் அடைந்து கிடக்க வேண்டாம்.

* நண்பர்களை அழைத்து செல்போனில் புலம்பிக் கொண்டிருப்பது, ‘நான் பாஸாகி விடுவேனா?’ என்று நம்பிக்கையற்று இருப்பது, ‘பாஸாகாவிட்டால் அவ்வளவுதான்’ என்று எதிர்மறையாக நினைத்துக் கொண்டிருப்பது போன்றவற்றை கைவிடுங்கள். தியானம், யோகா செய்து மனதை அமைதிப்படுத்துங்கள். “நான் ஜெயிப்பேன்” என்ற நம்பிக்கையை மனதில் விதையுங்கள்.

* தனிமையை தவிருங்கள். நண்பர்கள், குடும்பத்தினருடன் உரையாடுங்கள். இந்தத் தேர்வுதான் என் எதிர் காலத்தை தீர்மானிக்கும் என்ற எண்ணத்தை கைவிடுங் கள். “நான் தனிப்பட்டவன் அல்ல, எனக்காக குடும்பம் இருக்கிறது, உதவிக்கு நண்பர்கள் இருக்கிறார்கள், உறவுகள் இருக்கிறது. எனது சுக துக்கத்தில் அவர்கள் பங்கெடுப்பார்கள். அவர்களுக்காக நான் இருக்கிறேன்” என்ற சமூக மதிப்பை மனதில் வளர விடுங்கள். இது எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும்.

* ‘எல்லாவற்றுக்கும் தீர்வு ஒன்று இருக்கிறது, மாற்று வழிகள் பல உண்டு’ என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தீர்வு இல்லாத பிரச்சினை என்று எதுவுமில்லை. தேர்வில் ஜெயித்து, நான் அடைய வேண்டிய லட்சியம் அது ஒன்று மட்டும்தான் என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கட்டும். ஆனால் அது கைநழுவும் போது அதைவிட சிறந்த உயரத்தை எட்டும் நம்பிக்கையும் உங்கள் மனதில் இருக்கட்டும். மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில் மாற்று வாய்ப்புகள் பற்றியும் சிந்திப்பதே மகத்தான வெற்றிக்கு வழிவகுக்கும்.

* எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உங்கள் மீது நீங்களே நம்பிக்கை கொண்டிருங்கள். உங்களை குறைத்து மதிப்பிடாமல் இருந்தாலே எதைப் பற்றிய அச்சமும் மனதில் எழுவதில்லை. உங்கள் பலவீனங்களை அறியுங்கள், ஆனால் அதில் மூழ்கிப்போகாமல் கடந்து வர முயற்சி செய்யுங்கள். அப்போது நீங்கள் வெற்றி சிகரத்தில் ஏறிக் கொண்டிருப்பீர்கள். பயம் அகலட்டும், வெற்றிகள் குவியட்டும். வாழ்த்துக்கள்!

Next Story