பெதப்பம்பட்டியில் உப்பாறு ஓடையின் குறுக்கே கொட்டப்படும் கட்டிட கழிவுகள்


பெதப்பம்பட்டியில் உப்பாறு ஓடையின் குறுக்கே கொட்டப்படும் கட்டிட கழிவுகள்
x
தினத்தந்தி 28 Feb 2018 3:30 AM IST (Updated: 28 Feb 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

பெதப்பம்பட்டியில் உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டிட கழிவுகள் கொட்டப்படுகிறது. எனவே அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிமங்கலம்,

தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது கிணறு, குளம், குட்டைகள், வாய்க்கால்கள் ஆகும். இவை முறையாக தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்புகளாலும் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெதப்பம்பட்டி பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெதப்பம்பட்டியில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் உப்பாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. பெதப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கட்டிட கழிவுகளை உப்பாறு ஓடையில் கொட்டி விடுகின்றனர். ஏற்கனவே ஓடைகளில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதால் நீர் நிலைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

மேலும் மழைகாலங்களில் உப்பாறு ஓடையில் தண்ணீர் அதிக அளவு வரும் போது தண்ணீர் செல்லும் பாதைகள் அடைக்கப்படுவதால் தண்ணீர் வீணாவதோடு மட்டுமின்றி உப்பாறு ஓடையின் பரப்பளவும், குறையும் வாய்ப்பு உள்ளது. மேலும் பிளாஸ்டிக் பைகள் இந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பிளாஸ்டிக் பைகளை இந்த ஓடையில் கொட்டி வருகிறார்கள்.

அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளதால் அவை காற்றில் பறந்து விபத்தை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் மழைநீர் மண்ணுக்கு செல்வது தடை படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மண்வளம் குறைந்து புவி வெப்பமயமாகிறது.

பிளாஸ்டிக் மக்காத குப்பை என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை எரிப்பதால் பல தீமை விளைவிக்கக்கூடிய வாயுகள் வெளியேறி சுற்றுச்சூழலை பாதிக்கிறது. ஏற்கனவே குடிமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடும் வறட்சி காணப்படுகிறது. இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் ஆயிரம் அடிக்கு கீழே சென்றுவிட்டது. எனவே நீர்நிலைகளை பாதுகாத்து அங்கு கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை அப்புறப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story