சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் பிளஸ்-2 மாணவியை கற்பழிக்க முயற்சி


சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் பிளஸ்-2 மாணவியை கற்பழிக்க முயற்சி
x
தினத்தந்தி 28 Feb 2018 3:15 AM IST (Updated: 28 Feb 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் பிளஸ்-2 மாணவியை கற்பழிக்க முயன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தை அரசு அதிகாரியாக உள்ளார். ராணி சைதாப்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். தினமும் மாலையில் பள்ளியிலிருந்து டியூசன் படிக்கச்சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிச்செல்வது வழக்கம்.

வீட்டிற்கு செல்லும்போது, சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் தனது தோழியை பார்த்து பேசிவிட்டு செல்வார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், தனது தோழியை பார்ப்பதற்காக சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது துணியால் முகத்தை மூடியபடி 4 வாலிபர்கள் அங்கு வந்தனர். திடீரென அவர்கள் ராணியின் வாயைப்பொத்தி குண்டுக் கட்டாக பஸ் நிலையம் பின்புறம் உள்ள மறைவான இடத்திற்கு அவரை தூக்கிச்சென்றனர். அங்கு ராணியை கற்பழிக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதற்குள் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் ராணியின் செல்போனையும், அவர் வைத்திருந்த 150 ரூபாயையும் பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணைகமிஷனர் மகேஸ்வரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சைதாப்பேட்டை பஸ் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர்.

உதவி கமிஷனர் அனந்தராமன் தலைமையில், தனிப்படை போலீசார் அந்த வாலிபர்கள் 4 பேரையும் வலைவீசி தேடினார்கள். இந்த நிலையில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த 4 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story