ஊட்டியில் குடியிருப்புகள் அருகே காட்டுத் தீ பரவியதால் பரபரப்பு


ஊட்டியில் குடியிருப்புகள் அருகே காட்டுத் தீ பரவியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Feb 2018 2:45 AM IST (Updated: 28 Feb 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் குடியிருப்புகள் அருகே காட்டுத்தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வீட்டுக்குள் இருந்த பெண்கள் அச்சத்தில் வெளியே ஓடிவந்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்கள் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், வனப்பகுதிகளில் மரங்களில் உள்ள இலைகள் காய்ந்து கீழே விழுந்து தரையில் பரவி கிடக்கிறது. தற்போது வெயில் அடித்து வருவதால் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நீலகிரி வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட ஊட்டி புதுமந்து பகுதியில் உள்ள பவுட்டோ மலைப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காட்டுத்தீ காய்ந்த கிடந்த இலைகளில் பற்றி எரிந்ததால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவிக்கொண்டே இருந்தது. இதனால் வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகள் அமைத்து காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்றும் அப்பகுதியில் இருந்து புகை வெளிவந்து கொண்டே இருந்தது.

பின்னர் மதியம் 1 மணியளவில் மீண்டும் காட்டுத்தீ திடீரென்று ஏற்பட்டது. அது வேகமாக ஒவ்வொரு இடமாக பரவி ராஜ்பவன் பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்புகளை நோக்கி வந்தது. இதை அறிந்த பெண்கள் வீட்டிற்குள் இருந்து அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். அப்போது குடியிருப்பின் மேல்பகுதியில் காட்டுத்தீ எரிவது மற்றும் புகை மண்டலம் தெரிந்தது. உடனே வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரின் இணைப்பு மற்றும் மின்சாரத்தை துண்டித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து காட்டுத்தீ ஏற்பட்ட இடத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story