மதுரையில் என்ஜினீயர் கையை அறுத்து தற்கொலை முயற்சி, போலீசார் விசாரணை


மதுரையில் என்ஜினீயர் கையை அறுத்து தற்கொலை முயற்சி, போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 Feb 2018 4:45 AM IST (Updated: 28 Feb 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் என்ஜினீயர் ஒருவர் பிளேடால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை,

மதுரை நேதாஜி ரோடு, மேலஅகில்பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அப்பகுதியில் துணிக்கடை வைத்துள்ளார். இவரது மகன் விக்னேஷ்பாபு (வயது 27). இவர் சென்னையில் பிரபல கார் கம்பெனி ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வேலையை விட்டு விட்டு மதுரைக்கு வந்து விட்டார். நேற்று காலை விக்னேஷ்பாபுவின் பெற்றோர் அழகர்கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

வீட்டில் தனியாக இருந்த விக்னேஷ்பாபு திடீரென்று தனது இரண்டு கையிலும் பிளேடால் அறுத்துக் கொண்டார். ரத்தம் வழிந்த நிலையில் அதனை படம் எடுத்து பேஸ்புக்கில் அனுப்பினார். மேலும் அதில் “நான் நிம்மதியாக தூங்கப் போகிறேன்“ என்ற வாசகத்தையும் எழுதி இருந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள் வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் விக்னேஷ்பாபுவிடம் கதவை திறக்கச் சொன்ன போது, அவர் திறக்கவில்லை. இதற்கிடையே தெற்குவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்து அவர்களும் விரைந்து வந்தனர்.

அதன் பின்னர் அனைவரும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று மயங்கிய நிலையில் இருந்த விக்னேஷ்பாபுவை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ரத்தம் அதிகம் வெளியே வராததால் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து தெற்குவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேஸ்புக்கில் படத்தை அனுப்பியதால் தான் விக்னேஷ்பாபு உயிர் பிழைத்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். விக்னேஷ்பாபு சென்னையில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்தப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டதால் விரக்தி அடைந்து அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அவரது உறவினர்கள் அதனை மறுத்துள்ளனர்.

எனினும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story