ஆண்டாள் குறித்து கூறிய கருத்துக்கு வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? முன்னாள் அமைச்சர் கேள்வி


ஆண்டாள் குறித்து கூறிய கருத்துக்கு வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? முன்னாள் அமைச்சர் கேள்வி
x
தினத்தந்தி 28 Feb 2018 4:15 AM IST (Updated: 28 Feb 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

ஆன்மிக அரசியல் தனது கொள்கை என்று கூறும் ரஜினிகாந்த், ஆண்டாள் குறித்து கூறிய கருத்துக்கு வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கேள்வி எழுப்பினார்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பட்டுக்கோட்டை நகர செயலாளர் சுப.ராஜேந்திரன் வரவேற்றார். மதுக்கூர் ஒன்றிய செயலாளர் துரை.செந்தில் முன்னிலை வகித்தார்.

விழாவுக்கு சி.வி.சேகர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி 8 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலைகளும், 10 ஏழைப் பெண்களுக்கு தையல் எந்திரமும், 4 பேருக்கு இஸ்திரி பெட்டியும் வழங்கி பேசினார்.

விழாவில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

இன்றைக்கு பல பேர் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் ஆரம்பிக்கிறேன் என்கிறார் கமல்ஹாசன். அப்துல் கலாம் இறுதி ஊர்வலத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று அவரிடம் கேட்டால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வது இல்லை என்கிறார். சிவாஜி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் கமல்.

நடிகராக இருந்து அரசியல்வாதியாகி கட்சி தொடங்கி வெற்றி பெற்றவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. 69 வயதில் அரசியலில் இறங்குகிறார். நடிகர் ரஜினிகாந்த். ஆன்மிக அரசியல் எனது கொள்கை என்கிறார். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து கொச்சைப்படுத்தினாரே? ஆன்மிக அரசியல் பேசும் ரஜினிகாந்த் இதற்கு கண்டனம் தெரிவித்தாரா? காவிரி நதிநீர் பிரச்சினை பற்றி ரஜினிகாந்த் பேசினாரா?

காவிரி நதி நீருக்காக ஜெயலலிதா சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார். ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருந்தாரா? ஜெயலலிதா தலைவரா? ரஜினிகாந்த் தலைவரா? காவிரி நதிநீர் பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்கள். ஆனால் ரஜினிகாந்த், கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து காவிரி நீர் பற்றி பேசினாரா?

பிள்ளை பிடிக்கும் கும்பல் ஆள் பிடிப்பது போல தினகரன் ஊர், ஊராகப் போய் ஆள் பிடிக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றது போல் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட முடியுமா? 20 ரூபாய் டோக்கன் கொடுத்து திருட்டு வழியில் வெற்றி பெற்றது தெரியாதா? ஆர்.கே.நகர் வெற்றி ஜனநாயகத்தின் படுதோல்வி. எல்லாரும் கட்சி தொடங்குகிறார்கள். தொடர்ந்து கட்சியை நடத்த முடியுமா? ஜெயலலிதா 30 லட்சம் கட்சி உறுப்பினர்களை 1 கோடி உறுப்பினர்களாக ஆக்கினார். அவர் போல யாரும் வரமுடியுமா?

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட பால்வளத்தலைவர் ஆர்.காந்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலைஅய்யன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன். மாவட்ட ஜெயலலிதாபேரவை தலைவர் உதயகுமார், முன்னாள் நகர செயலாளர் சிவகுமார், நகரசபை முன்னாள்துணைத்தலைவர் பாரதிதாசன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், நகரசபை முன்னாள் உறுப்பினர் செல்லநாகராஜன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சாம்பசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பி.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Next Story