பங்காரு அடிகளாரின் 78-வது பிறந்தநாள்: 22 ஆன்மிக ஜோதிகள் இணைந்து ஏக ஜோதி ஏற்றும் விழா


பங்காரு அடிகளாரின் 78-வது பிறந்தநாள்: 22 ஆன்மிக ஜோதிகள் இணைந்து ஏக ஜோதி ஏற்றும் விழா
x
தினத்தந்தி 28 Feb 2018 4:00 AM IST (Updated: 28 Feb 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 78-வது பிறந்தநாளையொட்டி 22 ஆன்மிக ஜோதிகள் இணைந்து ஏக ஜோதி ஏற்றும் விழா மயிலாடு துறையில் நடந்தது.

தஞ்சாவூர்,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிககுரு பங்காரு அடிகளாரின் 78-வது பிறந்தநாள் விழா வருகிற 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் சார்பாக 22 ஆன்மிக ஜோதிகள் கடந்த 3-ந் தேதி திருவாரூர் சக்தி பீடத்தில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் வீடுகளுக்கு இளைஞரணி சக்தி தொண்டர்களால் எடுத்துச்செல்லப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இந்த ஆன்மிக ஜோதிகள் நேற்று காலை பக்தர்களால் மயிலாடுதுறை கொண்டு வரப்பட்டது. அப்போது மேளதாளம், சீர்வரிசையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏக ஜோதி

இதைத்தொடர்ந்து, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் பி.எஸ்.வாசன் தலைமையில் கோ பூஜையும், 1,008 தமிழ் மந்திரங்களுடன் கலசவிளக்கு வேள்வி பூஜையும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் 22 ஆன்மிக ஜோதிகள் இணைந்து ஏக ஜோதி ஏற்றப்பட்டது.

மாவட்ட துணைத்தலைவர் சேதுராமன், செயலாளர் முத்துவேல், பொருளாளர் ஜெயராமன், இணைச்செயலாளர்கள் குணாளன், மேகலா, தணிக்கையாளர் பார்த்தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தஞ்சை, திருவாரூர், நாலுவேதபதி சக்தி பீட தலைவர்கள் மற்றும் 27 வட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை வட்ட தலைவர்கள் கோவிந்தராஜன், நடராஜன் மற்றும் குத்தாலம் வட்ட தலைவர் அன்பழகன், பொறையாறு வட்ட தலைவர் அசோகன் ஆகியோர் செய்திருந்தனர். வேள்வி பூஜை ஏற்பாட்டை இணைச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் வேள்விக்குழுவினர் செய்திருந்தனர்.

இந்த வேள்வியில் ஏற்றப்பட்ட ஏக ஜோதி இளைஞர் அணி தொண்டர்களால் எடுத்துச்செல்லப்பட்டு இன்று(புதன்கிழமை) மாலை மேல்மருவத்தூரில் நடை பெறும் வேள்வியில் சேர்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் 78 தென்னை மரக்கன்றுகள், ஆடைகள், கல்விப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

Next Story