சிதம்பரம் அருகே நடந்த மனுநீதி நாள் முகாமுக்கு கலெக்டர் தண்டபாணி அரசு பஸ்சில் சென்றார்


சிதம்பரம் அருகே நடந்த மனுநீதி நாள் முகாமுக்கு கலெக்டர் தண்டபாணி அரசு பஸ்சில் சென்றார்
x
தினத்தந்தி 1 March 2018 3:30 AM IST (Updated: 28 Feb 2018 11:02 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே நேற்று நடந்த மனுநீதிநாள் முகாமுக்கு கலெக்டர் தண்டபாணி அரசு பஸ்சில் சென்றார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய பிரசாந்த் மு.வடநேரே ஒரு கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமுக்கு அரசு பஸ்சில் சென்று வந்து ஒரு புதிய நடைமுறையை ஏற்படுத்தினார். அவருக்குப்பின்பு புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள தண்டபாணியும் சிதம்பரம் அருகே உள்ள கீழதிருக்கழிப்பாலை ஊராட்சியில் நேற்று நடந்த மனுநீதிநாள்முகாமுக்கு அதிகாரிகளுடன் அரசு பஸ்சில் செல்ல முடிவு செய்தார். அதன்படி கடலூர் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் இருந்து நேற்று காலையில் புறப்பட்ட அரசு பஸ்சில் கலெக்டர் தண்டபாணியும், அதிகாரிகளும் கீழ திருக்கழிப்பாலை ஊராட்சிக்கு சென்றார். அங்கு அவரது தலைமையில் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் சிறப்பு கிராமசபை கூட்டம் மற்றும் மனுநீதிநாள் முகாம் நடந்தது.

மனுநீதிநாள் முகாம் தமிழகத்தில் சிறப்பான நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிவது போல் மாதந்தோறும் ஏதேனும் ஒரு ஊராட்சிக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிவதற்காக இம்மனுநீதிநாள் முகாம் நடத்தப்படுகிறது. கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு. நகர்புறத்தைப்போல் கிராமத்தையும் முன்னேற்றமடைய செய்ய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த மனுநீதிநாள் முகாம் தொடர்பாக ஏற்கனவே பெறப்பட்ட 936 மனுக்களில் 598 மனுக்கள் ஏற்கப்பட்டும், 316 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டும் உள்ளன. 22 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

முகாமில், வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் 517 பயனாளிகளுக்கு 58 லட்சத்து 42 ஆயிரத்து 445 ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வே.ப.தண்டபாணி வழங்கினார்.

இம்முகாமில் வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை போன்ற பல்வேறு துறைகள் தங்கள் துறை சாந்த திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைத்திருந்தனர். இதனை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை பற்றி தெரிந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, சப்-கலெக்டர்(பயிற்சி) எம்.பி.சிவன் அருள், ராசன்வாய்க்கால் பாசன விவசாய சங்க தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிவஞானசுந்தரம், தேவதாஸ், ஒன்றிய பொறியாளர்கள் சந்தானகிருஷ்ணன், சுரேஷ், மாவட்ட மகளிர் திட்ட உதவி இயக்குனர் விஜயகுமார், முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் ராஜாங்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோகுல்வாண்டையார், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ரவி வாண்டையார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தாசில்தார் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Next Story