சான்றிதழ் பெற அணுகும் விவசாயிகளை அரசு அலுவலர்கள் அலைக்கழிக்கக்கூடாது


சான்றிதழ் பெற அணுகும் விவசாயிகளை அரசு அலுவலர்கள் அலைக்கழிக்கக்கூடாது
x
தினத்தந்தி 1 March 2018 4:00 AM IST (Updated: 28 Feb 2018 11:55 PM IST)
t-max-icont-min-icon

விவசாய பணிகளுக்கு சான்றிதழ் பெற அணுகும் விவசாயிகளை அரசு அலுவலர்கள் அலைக்கழிக்கக்கூடாது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், வேளாண் இணை இயக்குனர் சுசீலா, மாவட்ட வருவாய் அலுவலர்(சிப்காட்) துர்காமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் விவசாய சாகுபடிக்கு அரசு அளிக்கும் பல்வேறு உதவிகளை பெற துறை சார்ந்த சான்றிதழ்களை பெற சம்பந்தப்பட்ட அலுவலர்களை அணுகும்போது தேவையற்ற அலைக்கழிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக வருவாய்த்துறையை சேர்ந்த பலர் ஆதாய நோக்கத்துடன் விவசாயிகளுக்கு தேவையான சான்றிதழ்களை உரிய நேரத்தில் வழங்காமல் அலையவிடும் நிலை உள்ளது. இதனால் அரசு வழங்கும் திட்ட உதவிகளை விவசாயிகள் உரிய நேரத்தில் பெற்று பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவில் பெய்யாததால் வறட்சி அதிகரித்து உள்ளது. இதை எதிர்கொள்ள சொட்டு நீர்பாசன திட்டத்தை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்த முன்வர வேண்டும். விவசாய பணிகளுக்கு தேவையான உதவிகள், சான்றிதழ்களை கேட்டு அணுகும் விவசாயிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அலைக்கழிக்கவோ, சிரமப்படுத்தவோ கூடாது. சான்றிதழ்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தும் அரசு ஊழியர்கள் குறித்து என்னிடம் விவசாயிகள் நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.

Next Story