கோத்தகிரி அருகே யானை தாக்கி தொழிலாளி பலி, கிராம மக்கள் அச்சம்


கோத்தகிரி அருகே யானை தாக்கி தொழிலாளி பலி, கிராம மக்கள் அச்சம்
x
தினத்தந்தி 1 March 2018 3:15 AM IST (Updated: 1 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரி ழந்தார். இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி செம்மனாரை ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தாசன் என்பவரது மகன் மகாலிங்கம் (வயது 43). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் மகாலிங்கம் நேற்று மதியம் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மாலை சுமார் 5 மணியளவில் வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை வெளியே வந்துள்ளது.

யானையை பார்த்ததும் மகாலிங்கம் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் யானை மகாலிங்கத்தை தாக்கி துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கினார். இதையடுத்து யானை மகாலிங்கத்தை மிதித்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது அங்கு யானை பிளிறியபடி நின்றது. பொதுமக்கள் யானையை விரட்டியடித்தனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனக்காப்பாளர் முருகன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மகாலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி தொழிலாளி இறந்ததால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறிய தாவது:-

கோத்தகிரி, குஞ்சப்பனை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் தற்போது பலா மரங்களில் அதிகளவில் காய்கள் காய்த்துள்ளன. இதன் காரணமாக சமவெளி பகுதிகளில் இருந்து வரும் காட்டு யானைகள் பலா பழத்தை உண்பதற்காக இந்த பகுதிகளில் முகாமிட்டு உள்ளன.

யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என்றும், வேலைக்கு சென்று திரும்புபவர்கள் குழுவாக சென்று வர வேண்டும் என்றும் வனத்துறையினர் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் தான் மகாலிங்கம் என்பவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்துக்கு முதற் கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும். பின்னர் இறப்புக்கான சான்றிதழ் பெறப்பட்டு மீதமுள்ள ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story