வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்


வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 1 March 2018 4:00 AM IST (Updated: 1 March 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை வெளிப்பாளையத்தில் அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகத்தையொட்டி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசிமக பிரம்மோற்சவ விழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமி சிம்ம வாகனம், பூத வாகனம், யானை வாகனம், இந்திர விமானம், குதிரை வாகனம், ரிஷப வாகனம், கைலாச வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி வசந்த உற்சவம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக அகஸ்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினார். பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் நடராஜர் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று (வியாழக்கிழமை) மாசி மகம் தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், கடற்கரைக்கு சாமி புறப்பாடு மற்றும் சமுத்திர தீர்த்தம் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) பிராயசித்த அபிஷேகம், பந்தல் காட்சி, 3-ந்தேதி தியாகராஜர் மரகதலிங்கம் வழிபாடு மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. பின்னர் விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 4-ந்தேதியும், 5-ந்தேதி திருக்கல்யாணமும், 7-ந்தேதி புஷ்ப பல்லக்கு வீதி உலாவும், 8-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது. 

Next Story