திருவண்ணாமலையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் அகற்றம் 75 பேர் கைது


திருவண்ணாமலையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் அகற்றம் 75 பேர் கைது
x
தினத்தந்தி 1 March 2018 4:30 AM IST (Updated: 1 March 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலை அகற்றப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே உள்ள சிக்னல் ரவுண்டானா பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் முழுஉருவ சிலைகளை அ.தி.மு.க.வினர் வைத்திருந்தனர். இதற்கு முறையான அனுமதி கிடைக்காததால் இரண்டு சிலைகளும் மூடி வைக்கப்பட்டது.

இதனையடுத்து ஜெயலலிதா பிறந்த நாளன்று 2 சிலைகளும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை அகற்றப்போவதாக தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர் இரவு 10 மணி அளவில் சிலைகள் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், சிலைகளை அகற்றக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனையடுத்து வருவாய்த்துறையினர் சிலைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வருவாய்த்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் நேற்று அதிகாலை வரை தொடர்ந்தது. இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை கைது செய்தனர். பின்னர் அதிகாலை 5 மணி அளவில் சிலைகளை பொக்லைன் எந்திரம் மூலம் வருவாய்த்துறையினர் அகற்றினர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story