தனியார் பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்ட தொழிலாளிகள்


தனியார் பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்ட தொழிலாளிகள்
x
தினத்தந்தி 1 March 2018 3:00 AM IST (Updated: 1 March 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தனியார் பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்தை நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அம்மாபேட்டை காந்தி மைதானம் அருகே இந்த பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென அந்த தனியார் பஸ்சை வழி மறித்தனர்.

பின்னர் அவர்கள் பஸ்சில் ஏறி கண்டக்டர், டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பஸ்சில் இருந்த பயணிகள் இதை தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களில் ஒருவர் தான் அணிந்திருந்த பெல்டை கழற்றி பயணிகளை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ரகளையில் ஈடுபட்ட 2 பேரையும் மடக்கி பிடித்தனர். அப்போது அவர்களை சிலர் தாக்கினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து போலீசார், ரகளையில் ஈடுபட்ட 2 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் சேலம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்த சற்குணம் (வயது37), சின்னவர் (33) என்பதும் கட்டிட தொழிலாளிகள் என்பதும் தெரியவந்தது. இவர்களுடைய மோட்டார் சைக்கிளை பஸ் உரசி சென்றதால் ஆத்திரமடைந்த அவர்கள் பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story