பஸ்சில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் படுகாயம்: மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


பஸ்சில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் படுகாயம்: மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 1 March 2018 4:30 AM IST (Updated: 1 March 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணியில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார். கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திருத்தணி,

திருத்தணி அருகில் உள்ள முரக்கம் பட்டை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் மோகன் (வயது 19). திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசாமி அரசினர் கலைக்கல்லூரியில் பொருளியல் 2-ம் ஆண்டு பட்டபடிப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல மோகன் கல்லூரிக்கு பஸ்சில் சென்றார். பஸ்சில் அதிக அளவில் பயணிகள் இருந்ததால் அவர் பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார்.

அந்த பஸ் திருத்தணி அக்கய்யநாயுடு ரோட்டில் வரும் போது மாணவர் மோகன் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த பஸ்சில் இருந்த மற்ற மாணவர்கள் மோகனை உடனடியாக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில் தங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் தான் இப்படிப்பட்ட விபத்துகள் தொடர்ந்து நடக்கிறது என்று மாணவ-மாணவிகள் கூறினர். தங்களுக்கு போதிய அளவில் திருத்தணியில் இருந்து கல்லூரிக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தங்கள் வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் அனைவரும் கல்லூரியின் வளாகத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்த திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தகுமார், தாசில்தார் நரசிம்மன், திருத்தணி அரசு பஸ் பணிமணை மேலாளர் ரவீந்திரன், கல்லூரி முதல்வர் கலைநேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமணன் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து மாணவ-மாணவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

கல்லூரிக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் போதிய அளவில் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story