ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவு


ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 March 2018 4:30 AM IST (Updated: 2 March 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி மதுரை சிறையிலுள்ள ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் தனக்கு பரோல் வழங்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 26 ஆண்டுகளாக நன்னடத்தையுடன், தண்டனை கழிந்துவிட்ட நிலையிலும் சிறையில் உள்ளேன். 26 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் சென்று உள்ளேன். 20 ஆண்டுகள் கழித்து விடுதலையாவேன் என்ற நம்பிக்கையில், எனது சொத்துகளை பிரிக்கும் நோக்கில் எனக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பில் விடுவிக்க கோரியதன் அடிப்படையில் 15 நாட்கள் விடுப்பில் வந்தேன். ஆனால் அப்போது என்னோடு பாதுகாப்பிற்கு வந்த போலீசார் சொத்துப்பங்கீடு தொடர்பாக வழக்கறிஞர்களை சந்திக்கவோ, சொத்தை பார்வையிடவோ அனுமதிக்கவில்லை.

தற்போது எனது அம்மாவுக்கு 62 வயதாகிவிட்ட நிலையில் அடிக்கடி நோய்வாய்ப் படுகிறார். எனவே சொத்து மற்றும் வேளாண் விவகாரங்களை எனது தாயார் தனியாக கையாள இயலாத நிலையில் உள்ளார். மேலும், ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசிற்கு தீர்மானம் நிறைவேற்றி மாநில அரசு கடிதம் அனுப்பியது. அதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித முடிவும் எட்டப்படாமல் உள்ளது. எனவே, நான் சாதாரண விடுப்பில் வந்து 2 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், எனக்கு பரோலில் செல்ல உரிமை உண்டு என தமிழக முதன்மை செயலாளர் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எனவே என்னுடைய சொத்தை பங்கீடு செய்வதற்காக எனக்கு ஒரு மாதம் அல்லது நீண்ட கால பரோலில் செல்ல அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ‘ரவிச்சந்திரனின் உயிர் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை கருதி அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை‘ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ‘சிறைத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மனுதாரர் கடந்த முறை விடுப்பில் சென்றிருந்தபோது எவ்வித சொத்துப்பதிவும் செய்யவில்லை என்று கூறப்பட்டிருந்தது. அதோடு, கடந்த முறை வீட்டை விட்டு வெளியே செல்ல மனுதாரர் அனுமதி கோராததால், வெளியே செல்ல அனுமதிக்கவில்லை‘ என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், மனுதாரருக்கு 2 வாரங்கள் பரோல் வழங்க அனுமதிக்கப்படுகிறது. எந்த நாட்களில் அவருக்கு பரோல் வழங்குவது என்பதை சிறைத்துறை முடிவு செய்து கொள்ளலாம். அந்த சமயத்தில் அவர் செல்போன் பயன்படுத்தக்கூடாது. அரசியல் பிரமுகர்களை சந்திக்கக் கூடாது. பேட்டி கொடுக்கக் கூடாது. தனது சொத்து பத்திரப்பதிவு சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story