தன்னுடன் பேச மறுத்ததால் ஆத்திரம்: காதலியுடன் இருந்த புகைப்படத்தை ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிட்ட வாலிபர் கைது


தன்னுடன் பேச மறுத்ததால் ஆத்திரம்: காதலியுடன் இருந்த புகைப்படத்தை ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 March 2018 3:30 AM IST (Updated: 3 March 2018 12:04 AM IST)
t-max-icont-min-icon

தன்னுடன் பேச மறுத்ததால் காதலியுடன் இருந்த புகைப்படத்தை ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லிக்குப்பம்,

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 28). இவருக்கும் கடலூர் தூக்கணாம்பாக்கத்தை சேர்ந்த 27 வயது இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது இவர்களுக்கிடையே காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். மேலும் அவ்வபோது தனிமையிலும் சந்தித்து காதலை வளர்த்து வந்து இருக்கிறார்கள்.

அப்போது அன்பழகன் தனது காதலியுடன் சேர்ந்து செல்போனில் படம் எடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது, அந்த பெண் அன்பழகனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். பல முறை அவரிடம் பேச முயற்சித்தும், அன்பழகனால் பேச முடியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் காதலியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, பெண்ணின் அண்ணனுடைய வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பி இருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் அண்ணன் இதுகுறித்து அன்பழகனிடம் சென்று கேட்டார். அப்போது அன்பழகன் அவரை திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பெண்ணின் அண்ணன் தூக்கணாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அன்பழகனை கைது செய்தனர்.

Next Story