பரிசோதனைக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும்: வட்டார மருத்துவமனை மாற்றத்தால் கர்ப்பிணிகள் அவதி


பரிசோதனைக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும்: வட்டார மருத்துவமனை மாற்றத்தால் கர்ப்பிணிகள் அவதி
x
தினத்தந்தி 3 March 2018 3:00 AM IST (Updated: 3 March 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

பாகனேரி மற்றும் சொக்கலிங்கபுரம், நகரம்பட்டி உள்ளிட்ட பகுதிகள் மறவமங்கலம் வட்டார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதால், அப்பகுதி கர்ப்பிணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கல்லல்,

காளையார்கோவில் வட்டார மருத்துவமனையின்கீழ் பாகனேரி, சொக்கலிங்கபுரம், நகரம்பட்டி, அம்மன்பட்டி உள்ளிட்ட பகுதிகள் இருந்து வந்தன. தற்போது காளையார்கோவில் வட்டார மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டதால், பாகனேரி உள்ளிட்ட பகுதிகள் மறவமங்கலம் வட்டார மருத்துவமனையின்கீழ் மாற்றம் செய்யப்பட்டன. ஆனால் பாகனேரி, நகரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மறவமங்கலம் சுமார் 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் மருத்துவ தேவைக்கு வெகு தூரம் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் முக்கிய பரிசோதனைகளுக்கு 50 கி.மீ. தூரமுள்ள மறவமங்கலம் வட்டார மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அத்துடன் அவர்கள் மறவமங்கலம் செல்ல வேண்டும் என்றால் 3 பஸ்கள் மாறி செல்ல வேண்டும். இதனால் அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் இப்பகுதியில் உள்ள சுகாதார பணியாளர்கள் தங்களது அலுவலகத்திற்கு சென்று வரவே ஒருநாள் ஆகிறது. இதனால் தங்கள் பகுதியில் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். கர்ப்பிணிகளுக்கு முக்கியமான பரிசோதனைகள் வட்டார மருத்துவமனையில் செய்யப்படுவதால் வேறு வழியின்றி சிரமங்களை சந்தித்து அவர்கள் சென்று வருகின்றனர்.

எனவே கர்ப்பிணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு மாற்று நடவடிக்கையாக பாகனேரி தாய், சேய் நல மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் 10 கி.மீ. தூரத்தில் உள்ள செம்பனூர் வட்டார மருத்துவமனைக்கு இப்பகுதிகளை இணைக்க சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story