நீடித்த மானாவாரி விவசாய இயக்க திட்டத்தின் கீழ் 12 ஒன்றியங்களில் சாகுபடியை ஊக்குவிக்க திட்டம்
நீடித்த மானாவாரி விவசாய இயக்க திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் சாகுபடியை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட வேளாண்மை துறையின் சார்பில் நீடித்த மானாவாரி விவசாய இயக்கம் மூலமாக மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழகத்தில் மானாவாரி விவசாயிகள் மேம்பாட்டுக்காக நீடித்த மானாவாரி விவசாயத்துக்கான இயக்கம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டில் 12 தொகுப்புகள் அமைக்கப்பட்டு, மடத்துக்குளம் ஒன்றியம் தவிர 12 ஒன்றியங்களிலும் மானாவாரி சாகுபடியை ஊக்குவிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு வட்டாரத்திலும் அதிக அளவில் மானாவாரி சாகுபடி செய்யப்படும் கிராமங்களை தேர்வு செய்து அதன் தொடர்ச்சியாக 1,000 எக்டர் கொண்ட தொகுப்பை உருவாக்கி இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் கோடை உழவு செய்து கொடுக்கப்படும். ஒரு எக்டருக்கு ரூ.1,250 வீதம் உழவு பணிக்கு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். 2017-18-ம் ஆண்டில் 12 இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மானாவாரி பயிர்களான சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் சாகுபடியை ஊக்குவிக்க 50 சதவீத மானிய விலையில் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. வரப்புகள் மற்றும் பண்ணைக்குட்டைகள் அமைக்க ஒரு தொகுப்புக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு பெறப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. 12 இடங்களில் எந்திர வாடகை மையங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. நீடித்த மானாவாரி திட்டத்தில் அதிக விவசாயிகள் பயன்பெறும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பயிற்சி வகுப்பில் வேளாண்மை துறை இணை இயக்குனர் முகமது இக்பால், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) அரசப்பன், தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவு துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story