ஹோலி பண்டிகை கொண்டாட்டம்


ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 3 March 2018 3:00 AM IST (Updated: 3 March 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட இந்தியர்கள் சார்பில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி,

வட இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஹோலி ஒன்றாகும். இந்த பண்டிகையையொட்டி வண்ண பொடிகளை முகத்தில் தூவியும், கலர் பொடி கலந்த தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் அடித்து விளையாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். இந்த ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட மாநில மக்கள் பலரும் வசித்து வருகிறார்கள். மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன் கனிக்கோட்டை, சூளகிரி, காவேரிப்பட்டணம் உள்பட பல்வேறு பகுதிகளில் அவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் நேற்று ஹோலி பண்டிகையை விமரிசையாக கொண்டாடினார்கள்.

இதையொட்டி வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவியும், கலர் பொடிகள் கலந்த தண்ணீரை ஒருவர் மீது மற்றொருவர் அடித்தும் விளையாடினார்கள். மேலும் பாங்கு எனப்படும் உற்சாக பானத்தை பருகியபடி நடனம் ஆடினார்கள். மேலும் ஒருவருக்கொருவர் இனிப்பு பரிமாறி கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஹோலி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட மாநில இளைஞர்கள் பணிபுரிய கூடிய நிறுவனங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. வட இந்திய இளைஞர்கள் பலரும் நேற்று வண்ண பொடிகளை முகத்தில் பூசியபடி மோட்டார் சைக்கிளில் நகரில் வலம் வந்தார்கள்.

Next Story