தேனியில் துணிகர சம்பவம்: அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் ரூ.9 லட்சம் திருட்டு


தேனியில் துணிகர சம்பவம்: அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் ரூ.9 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 3 March 2018 3:30 AM IST (Updated: 3 March 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக வைத்து இருந்த ரூ.9 லட்சம் திருட்டு போனது. தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி,

ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ராஜன். இவர் அரசு ஒப்பந்ததாரராக உள்ளார். இவருடைய அலுவலகம் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் மாடியில் அமைந்து உள்ளது.

இங்கு முத்தனம்பட்டியை சேர்ந்த குருநாதன் மகன் ராஜேஷ்குமார் (வயது 29) என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக தேனியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.9 லட்சம் எடுத்துவிட்டு அலுவலகம் வந்துள்ளார். அந்த பணத்தை அலுவலகத்தில் உள்ள லாக்கரில் வைத்துள்ளார். பின்னர், ஒப்பந்த பணிகளில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களுக்கு டீசல் போடுவதற்காக அலுவலகத்தை ராஜேஷ்குமார் பூட்டிவிட்டு, பழனிசெட்டிபட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் அலுவலக கதவு திறந்து கிடப்பதாக ராஜேஸ்குமாருக்கு தகவல் வந்துள்ளது. உடனே அவர் அலுவலகத்துக்கு வந்து பார்த்த போது, அங்கு லாக்கரில் வைத்து இருந்த ரூ.9 லட்சம் பணம் திருட்டு போய் இருந்தது. அலுவலக கதவை திறந்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்று இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து தேனி போலீஸ் நிலையத்தில் ராஜேஷ்குமார் புகார் செய்தார்.

அதன்பேரில் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருட்டு சம்பவம் குறித்து ராஜேஷ்குமார் உள்பட அங்கு பணியாற்றும் ஊழியர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story