தாறுமாறாக ஓடிய கார் மோதி பலியான ஆசிரியை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
குளித்தலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி உயிரிழந்த ஆசிரியையின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குளித்தலை,
குளித்தலை பெரியபாலம் அருகே நேற்று முன்தினம் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த முசிறி தனியார் பள்ளியில் ஆசிரியைகளாக பணிபுரிந்துவந்த குளித்தலை மலையப்ப நகரை சேர்ந்த ராமநாதன் மகள் ராதிகா(வயது 24), சண்முகாநகரை சேர்ந்த மணி மகள் கவுசல்யா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். கவுசல்யா மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதில் ராதிகா சிகிச்சை பலனின்றி குளித்தலை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று குளித்தலை அரசு மருத்துவமனையில் ராதிகாவின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கார் டிரைவரை கைது செய்ய வேண்டும் எனவும் அதுவரை பிரேதபரிசோதனை செய்யப்பட்ட ராதிகாவின் உடலை வாங்கமாட்டோம் எனக்கூறி ராதிகாவின் உறவினர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மறியல் கைவிடப்படப்படவில்லை. இதன்பின்னர் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாரதிபுரம் பகுதியை சேர்ந்த செல்வம்(45) என்பவரை முசிறிக்கு சென்று கைது செய்து குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்துவருவதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் கைது செய்யப்பட்ட டிரைவர் செல்வத்தை தாங்கள் நேரில் பார்க்கவேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து ராதிகாவின் உறவினர்கள் சிலர் நேரடியாக குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு சென்று கைது செய்யப்பட்ட கார் டிரைவர் செல்வத்தை பார்த்துவிட்டு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு ராதிகாவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுச்சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் திருச்சி- கரூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story